அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தை கலைப்பேன் என்றும் நடிகர் விஜய் அறிவித்துள்ளதாக அவர் பெயரிலான போலி டுவிட்டரில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நடித்த போது அவர் பெயரில் ரசிகர் மன்றம் துவங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரசிகர் மன்ற கிளை அமைப்புகள் உள்ளன. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ரசிகர் மன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சமூக சேவை பணிகளில் விஜய் ஈடுபட்டார். ஏழை மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்குதல் ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் வழங்குதல், ஏழை மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்தல் போன்ற பணிகளை செய்தார். சமீபத்தில் மீனப்பாக்கம் விமான நிலையம் எதிரில் ரசிகர் மன்ற மாநாடு நடத்தி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடைசி நேரத்தில் அவ்விழா ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் விஜய்யின் தலைவா படத்துக்கும் சிக்கல்கள் ஏற்பட்டன. கடந்த 9–ந்தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தியேட்டர் அதிபர்கள் ‘தலைவா’ படத்தை ரிலீஸ் செய்ய மறுத்து விட்டனர். வெளி மாநிலங்களில் திட்டமிட்டபடி படம் ரிலீசாகி தமிழகத்தில் திருட்டு சி.டி.க்கள் பரவிவிட்டன. இதனால் தலைவா பட குழுவினருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு தலைவா படத்தின் விளம்பர தலைப்பின் கீழ் இடம் பெற்ற ‘டைம் டு லீடு’ (தலைமை ஏற்கும் நேரம்) என்ற ஆங்கில வாசகம் நீக்கப்பட்டது. சில அரசியல் வசனங்களும் நீக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 20–ந் தேதி தியேட்டர்களில் படம் ரிலீசானது.
இந்த நிலையில்தான் டுவிட்டரில் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்தி வெளியானது. எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ரசிகர்கள் தயவு செய்து பேனர்களில் அரசியல் வசனங்களை எழுத வேண்டாம். என் வேண்டுகோளையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைப்பேன். ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இனி நானே நேரடியாக ஈடுபடுவேன். என் தந்தையோ வேறு யாரோ ரசிகர் மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள் என்று விஜய் குறிப்பிட்டுள்ளதாக வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் கூறும் போது, விஜய் டுவிட்டரில் இல்லை. அவர் பெயரில் போலியாக இச்செய்தியை வெளியிட்டுள்ளனர். யாரும் இதை நம்ப வேண்டாம்’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment