Saturday, July 20, 2013

ஆமா... நான் இப்போ ஹன்சிகா கூடத்தான் இருக்கேன்!- உறவை உறுதிப்படுத்திய சிம்பு





சென்னை: சினிமாக்காரர்கள் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றால், அது உண்மையாகப் போகிறது என்று அர்த்தம்.

 சில தினங்களுக்கு முன்பு தனக்கும் சிம்புவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்க சும்மா ப்ரண்ட்ஸ் மட்டும்தான் என கரகாட்டக்காரன் கோவை சரளா செந்திலைப் பார்த்து கவுண்டரிடம் சொல்வது போல ஸ்டேட்மெண்ட் விட்டிருந்தார் ஹன்சிகா.

ஹன்சிகா சொன்னதை உறுதிப்படுத்தி சிம்புவும் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் "ஆமா... நான் இப்போ ஹன்சிகா கூடத்தான் இருக்கேன். அவர் ரொம்ப நல்ல பொண்ணு. திருமணம் பற்றி விரைவில் வீட்டில் முடிவு செய்வார்கள். எங்கள் பிரைவசிக்கு மரியாதை கொடுங்க," என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை 6.07-க்கு ஹன்சிகாதான் முதலில் ட்விட் செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அதை உறுதி செய்து சிம்பு ட்விட் செய்துள்ளார். அதாவது இருவரும் ஒன்றாகத் தங்கியிருப்பதை இப்படி தெரியப்படுத்தியுள்ளனர்.



Friday, July 19, 2013

கார் விபத்தில் ஒருவர் பலியான வழக்கு: சல்மான்கான் கோர்ட்டில் சரண்





கார் விபத்து தொடர்பான வழக்கில் நடிகர் சர்மான்கான் இன்று கோர்ட்டில் ஆஜரானார்.

கடந்த 2002–ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் மும்பையில் அதி வேகமாக கார் ஓட்டியபோது 5 பேர் மீது மோதியது. இதில் ஒருவர் பலியானார். மற்றவர்கள் காயத்துடன் தப்பினார்கள்.
இது தொடர்பாக சல்மான்கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இன்று சல்மான்கான் கோர்ட்டில் ஆஜர் ஆக உத்தரவிட்டு இருந்தார். அதன்படி அவர் காரில் கோர்ட்டுக்கு வந்தார். அவருடன் 2 சகோதரிகளும் வந்தனர்.
வழக்கை வருகிற 24–ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அன்று அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.
சல்மான்கான் கார் ஓட்டிய போது குடிபோதையில் இருந்ததாக போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
ஏற்கனவே ராஜஸ்தானில் சல்மான்கான் மான் வேட்டையாடிய வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அவர் 3 நாட்கள் ஜெயிலில் இருந்த பின்பு ஜாமீனில் விடுதலையானார்

வாலியின் மறைவு பாட்டு உலகில் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது: கவிஞர் வைரமுத்து இரங்கல்






கவிஞர் வாலியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தின் முதுபெரும் பாடலாசிரியர் காவியக் கவிஞர் வாலியின் மறைவு பாட்டுலகில் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அழைத்த போதெல்லாம் அன்பாக பேசிமகிழ்ந்த ஒரு மூத்த நண்பரை நான் இழந்து விட்டேன்.
வாலி பெற்ற சில பெருமைகள் எந்தப் பாடலாசிரியருக்கும் எளிதில் வாய்க்காதவை. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பாடல் எழுதிய பாடலாசிரியர் வாலியாகத்தான் இருக்க முடியும். எம்.ஜி.ஆர். – சிவாஜி தொடங்கி நடித்துக்கொண்டிருக்கும் நான்காம் தலைமுறை வரைக்கும் பாட்டெழுதிய பெருமை அவருக்கு உண்டு.
கண்ணதாசன் என்ற கவியரசருக்கு சற்றே இணையாக நெடுந்தூரம் நடந்து வந்த சிறப்பும் வாலிக்கே வாய்த்தது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை எத்தனையோ இசையமைப்பாளர்களுக்கு வரிகளால் வலிமை சேர்த்தார்.
எம்.ஜி.ஆரின் பிம்பத்தை உயர்த்திப் பிடித்ததில் வாலியின் வார்த்தைகளுக்கு பெரும்பங்கு உண்டு. திராவிட இயக்க அரசியலை சாகித்தியத்தில் கொண்டு வந்த சாமர்த்தியம் வாலிக்கு வசப்பட்டிருந்தது. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்று எம்.ஜி.ஆருக்கு எழுதியவர், கலைஞரின் மைந்தர் மு.க.முத்துவுக்கு “மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ” என்று எழுதினார்.
மூன்று என்ற தொடங்கும் பல்லவியை இரண்டு பேருக்கும் பயன்படுத்தி இரு சாராரின் மனம் கவர்ந்த திறமை வாலிக்கு மட்டுமே வரும் உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசாதவர்; தான் உண்டு தன் தமிழ் உண்டு என்று வாழ்ந்தவர்.
வாழ்வின் நிறைவுக்காலத்தில் நோய்களை சந்தித்தாலும் நொந்து கொள்ளாதவர். “தாய்கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய்கொண்டு போகும் காலம் அம்மா” என்று எழுதிய வாலி தன் வரிகளையே தனக்கு இரங்கல் பாடலாக்கி இறந்து விட்டார்.
அவர் உயிர் பிரிந்திருக்கலாம்; உடலை ஐம்பூதங்கள் பிரித்துக் கொண்டிருக்கலாம். அவர் தமிழ் மரணம் தொடமுடியாத உயரத்தில் இருக்கிறது. அது காலமெல்லாம் அவர் புகழைப் பாடிக்கொண்டிருக்கும். இறங்கும் கண்ணீரை துடைத்து கொண்டு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’






மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பழைய படங்களை டிஜிட்டல் முறையில் மெருகேற்றி மீண்டும் வெளியிடுவது தற்போது தமிழ் சினிமாவில் பெருகி வருகிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘கர்ணன்’, ‘வசந்த மாளிகை’ உள்ளிட்ட காலத்தால் அழியாத படங்கள் டிஜிட்டல் முறையில் உருவாக்கி, மீண்டும் வெளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றன.
அந்த வரிசையில் ரஜினி, கமல் இணைந்து நடித்து 1979-ஆம் ஆண்டு வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ படமும் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்படுகிறது. இப்படத்தை கே.பாலச்சந்தர் இயக்கியிருந்தார். ஜெயப்பிரதா, கீதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற ‘நம்ம ஊரு சிங்காரி’, ‘சம்போ சிவ சம்போ’, ‘எங்கேயும் எப்போதும் சந்தோஷம்’ பாடல்கள் ரசிகர்களின் நெஞ்சில் என்றும் நீங்கா இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

விதார்த்-சூரி இணைந்து காமெடியில் கலக்கும் ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா






முத்தியாரா பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் எம்.ஆனிமுத்து தயாரிக்கும் புதிய படம் ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா’. இதில் மைனா படத்தில் நடித்த விதார்த் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு நாயகியாக வழக்கு எண் 18/9 படத்தில் நடித்த மனிஷா நடிக்கிறார். மேலும், சூரி, இளவரசு, கோவை சரளா, இமான் அண்ணாச்சி, முத்துக்காளை, சங்கிலி முருகன், ‘லொள்ளு சபா’ மனோகர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை ‘பொன்மனம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘அழகர் மலை’, ‘சுறா’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் பாடல்கள், கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அருள் தேவ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பழனி, பொள்ளாச்சி, வால்பாறை, சாலக்குடி, மூணாறு ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா’ ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கி வருகிறோம். இப்படத்தில் வேல்ப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் விதார்த்தும், முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் சூரியும் நடிக்கின்றனர். தனியார் பேருந்தின் டிரைவராக விதார்த்தும், கண்டக்டராக சூரியும் வருகின்றனர். இவர்கள் செய்யும் கலாட்டாவை காதலுடன் கலந்து படமாக்கியிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

சூர்யா ஜோடியாக நடிக்க அசினுக்கு எதிர்ப்பு


கவுதம்மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சூர்யா ஜோடியாக அசின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு மழைக் காலம் படத்தில் இருவரையும் ஜோடியாக நடிக்க வைக்க கவுதம் முடிவு செய்தார். ஆனால் அப்படம் நின்று போனது.
எனவே துருவ நட்சத்திரம் படத்தில் இருவரையும் ஜோடியாக்கியுள்ளார். அசின் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். சூர்யா, கவுதம் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். அசின் இப்படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம் பியுள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர், நடிகைகள் இலங்கை செல்ல திரையுலக சங்கங்கள் தடை விதித்தன. அதை மீறி அசின் இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார். எனவே அவரை தமிழ் படங்களில் நடிக்க வைக்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதையும் மீறி கவுதம்மேனன் தனது படத்தில் அசினை நடிக்க வைப்பது கண்டிக்கதக்கது. இதை அனுமதிக்க முடியாது தமிழர்கள் உணர்வுகளுக்கு எதிராக கவுதம் மேனன், செயல் படக்கூடாது அசினை நடிக்க வைத்தால் படப்பிடிப்பை நடத்தவிட மாட்டோம். போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஓட்டல் அதிபரானார் சந்தானம்!


தலைப்பை படித்தவுடனேயே அனைவரும் அதிர்ச்சியடைந்திருப்பீர்கள். நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் சந்தானம் ஓட்டல் ஒன்றிற்கு அதிபராவது என்பதில் அதிர்ச்சி ஏதும் இல்லை. ஆனால், நிஜத்தில் சந்தானம் ஓட்டல் எல்லாம் வாங்கவில்லை. ‘பட்டத்து யானை’ படத்தில்தான் இவர் ஓட்டல் அதிபராக நடிக்கிறார்.
‘மலைக்கோட்டை’ படத்திற்குப் பிறகு விஷாலும் இணைந்து பூபதிபாண்டியன் இயக்கும் படம் ‘பட்டத்து யானை’. இப்படத்தில் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தில்தான் சந்தானம் ஓட்டல் அதிபராக வருகிறார். அவருடைய ஓட்டலில் வேலை செய்பவராக விஷால் நடிக்கிறார்.
பூபதிபாண்டியன் படங்களில் வரும் வழக்கமான காமெடி கலாட்டாக்கள் இந்த படத்திலும் உள்ளது. படம் முடிந்து சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றுவிட்டது. வரும் 26-ந் தேதி படம் வெளியாக உள்ளது.

மரியான் – விமர்சனம்


ஏ.ஆர். ரஹ்மானின் வந்தே மாதரம் இசை ஆல்பத்தின் ஹிட்டுக்கு ரஹ்மான் எந்த அளவுக்கு காரணமோ அதே அளவுக்கு காரணமானவர் அதை அற்புதமாய் படமாக்கிய பரத்பாலா. அவர் இயக்குநராய் அறிமுகமாகும் படம், அதே ரஹ்மானின் இசையுடன் என பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் மரியான்.

கடலும் கடல் சார்ந்த காதலும் என முன்பகுதியில் தென் தமிழ்நாட்டு கடலோரம் பயணிக்கும் கதை காதலிக்கு உதவுவதற்காக ஆப்பிரிக்காவில் சூடான் நாட்டுக்கு தனுஷ் வேலைக்கு போவதும் அங்கு அவருக்கு ஏற்படும் பிரச்சினைகளும் அதில் மீண்டு வருகிறாரா, காதலியுடன் சேருகிறாரா என்பது தான் கதை.

தனுஷ் நடிப்பில் கொடி கட்டி பறக்கிறார் என்றே சொல்லலாம். அதுவும் ஆப்பிரிக்கா எபிசோடில் காட்சிக்கு காட்சி தேசிய விருதை ஞாபகப்படுத்துகிறார்.  தீவிரவாதிகள் கம்பெனிக்கு போன் போட்டு காசு கேட்க சொல்ல இவர் தன் காதலிக்கு போன் போட்டு விட்டு ஹெல்ப் சார்.. மணி சார் என பேசும் அந்த காட்சி நடிப்பில் அவர் தன் அடுத்த கட்டத்தை தொடுகிறார்.

பார்வதி மேனன் பூ படத்திற்குப்பின் மீண்டும் தமிழில். ‘பூ’வின் மொட்டாய் இருந்தவர் இப்போது நடிப்பில்  பூந்தோட்டமாய் பூத்துக்குலுங்குகிறார் .  காதல் காட்சிகளில் அவரின் முகபாவனைகள் கவிதை. மொத்தமாய் தேசிய விருது பெற்ற நடிகன் தனுஷுக்கு எந்த விதத்திலும் தான் சளைத்தவள் இல்லை என காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார்.இவ்வளவு நாள் இவர் வாய்பில்லாமல் வீணாக்கப்பட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இத்தனை அற்புதமான நடிகையை மீண்டும் தமிழ்சினிமாவிற்கு வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி.

இரண்டாம் கட்ட கதாநாயகர்களின் நண்பனாய் வந்து கொண்டிருந்த அப்புகுட்டிக்கு தனுஷ் போன்ற முன்னணி நடிகரின் நண்பனாய் ப்ரொமோசன். அந்த கதாபாத்திரத்தில் இயல்பாய் நடித்திருக்கிறார். சூடான் எபிசோடில் உடனிருந்த கஷ்டப்படும் நண்பனாய் ஜெகன். கொலைப்பசியில் தலைவாழை விருந்து சாப்பிடும் கற்பனைக்காட்சியில் தனுஷுக்கு இணையாய் நடித்திருக்கிறார்.

ரஹ்மான் தான் படத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட். பாடல்களிலும் பின்னணியிலும் படத்தின் தரத்தை இன்னொரு லெவலுக்கு கொண்டு செல்வது நிச்சயாய் ரஹ்மான்தான். நெஞ்சே எழு, இன்னும் கொஞ்ச நேரம், எங்க போன ராசா பாடல்கள் நெஞ்சை வருடுகின்றன. தனுஷின் வரிகளில் கடல் ராசா நான் பாடல் கலகலப்பு. ஆனாலும் ரஹ்மானின் பெஸ்ட்களான ஆரம்பகால படங்கள் தந்த குதுகலத்தை இன்றைய ரஹ்மான் இசை ஏனோ தரதவறுகிறது.

படத்தின் இன்னொரு ஹீரோ ஒளிப்பதிவாளர் மார்க் கோனின்க்ஸ். ஒவ்வொரு ஷாட்டும் ஒரு கவித்துவமான போட்டோ ப்ரேமாய் இருக்கிறது. பரத்பாலாவும் இவரும் சேர்ந்து படம் முழுவதும் ஒரு விஷுவல் விருந்து படைத்திருக்கின்றனர்.


ஒரு எளிமையான கதைதான்..அதுவும் இரண்டாம் பாதியில் சூடானில் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்ட தனுஷ் எப்படி தப்பிக்கிறார் என்பதை மெதுவாய் சொல்லும் திரைக்கதைதான். அதனால் ஒரு மாபெரும் திரைப்பட அனுபவத்தை தரும் அளவுக்கு படத்தில் பெரிய விசயமெல்லாம் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் அந்த எளிமையான கதையை அற்புதமாய் படமாக்கி, ஒரு அழகான அனுபவமாய் தந்திருக்கிறார் பரத்பாலா. 

Thursday, July 18, 2013

இந்தியில் ரீமேக் ஆகும் ‘நேரம்’


இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவீன், நஷ்ரியா நஸீம், தம்பி ராமையா, ஜான் விஜய் ஆகியோர் நடித்த படம் ‘நேரம்’. இப்படம் தமிழ் மற்றம் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியானது.
இரண்டு மொழிகளிலுமே பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் இந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது. இப்படம் வெளிவருவதற்கு முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற ’பிஸ்தா’ பாடல் இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதுபோலவே படமும் வித்தியாசமாக இருக்கவே மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது.
இந்தி ரீமேக்கையும் அல்போன்ஸ் புத்திரன்தான் இயக்க இருக்கிறாராம். இதுகுறித்து அவர் கூறும்போது, தமிழ் ரசிகர்களுக்கும் இந்தி ரசிகர்களுக்கும் வெவ்வேறான ரசனை உள்ளது. எனவே, இந்தி ரசிகர்களுக்கு பிடித்தவாறு கதையில் சில மாற்றங்கள் செய்து ரீமேக் செய்யப் போகிறோம். இது முழுக்க முழுக்க ரீமேக் படமாக இருக்காது.
கதைக்கு தகுந்தாற்போல் ‘நேரம்’ படத்தில் நடித்த நடிகர்கள் சிலரை மட்டும் இந்தியில் நடிக்க வைக்க இருக்கிறோம். மற்ற, நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

விஜய்-ன் ’தலைவா’ படம் வெளியாகும் தேதி தள்ளி வைப்பு?


‘துப்பாக்கி’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த படம் ‘தலைவா’. இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்கினார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சந்தானம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்து தற்போது வெளிவரும் தருவாயில் உள்ளது. இப்படம் ஆகஸ்ட் 9-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது.
‘துப்பாக்கி’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
விஜய் தற்போது நேசன் இயக்கத்தில் ‘ஜில்லா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து முதன்முறையாக நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

முனி-3 படத்திலிருந்து விலகிய அனிருத்


நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘முனி’, முனி 2-ம் பாகம் ‘காஞ்சனா’ படங்கள் வெளியாகி ஹிட்டாகியதைத் தொடர்ந்து தற்போது ‘முனி 3-ம் பாகம்’ இயக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். இப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக இருந்தது.
இந்நிலையில், ‘முனி 3’ படத்திற்கு தான் இசையமைக்கப் போவதில்லை என அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முனி 3- படத்திற்கு இசையமைக்க நேரம் ஒத்துவரவில்லை என்ற காரணத்தினாலேயே இவர் இந்த படத்தில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
‘3’, ‘எதிர்நீச்சல்’ படங்களின் பாடல்கள் வெற்றியடைந்ததை அடுத்து அனிருத்-ஐ, தங்கள் படங்களில் இசையமைக்க முன்னணி இயக்குனர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
அனிருத் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும், கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ், எல்.ரெட் குமார் ஆகியோர் இயக்கும் படங்களுக்கும் இசைமைக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதன் காரணமாகவே முனி-3 படத்திலிருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது.

‘வணக்கம் சென்னை’ என்னோட கதைதான்: கிருத்திகா உதயநிதி


உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கும் புதிய படம் ‘வணக்கம் சென்னை’. இப்படத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் கதை 1955 – ஆம் ஆண்டு ஜெமினி கணேசன்-சாவித்திரி நடித்த ‘மிசியம்மா’ படத்தின் தழுவல் என்று படக்குழுவினர் வாயிலாக செய்தி கசிந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் கிருத்திகா படுடென்ஷனாகி விட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘வணக்கம் சென்னை’ படத்தின் கதை ‘மிசியம்மா’ படத்தின் தழுவல் என்று கூறுவதில் உண்மை இல்லை. அது வெறும் வதந்திதான். நான் இலக்கியம் படித்தவள். கல்லூரியில் படிக்கும்போதே நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு சிறுகதைதான் ‘வணக்கம் சென்னை’. இது முழுக்க முழுக்க என்னோட கதைதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்படத்தின் ஆடியோவை வரும் 27-ந் தேதி வெளியிடவிருக்கின்றனர்.

கவிஞர் வாலி காலமானார்



தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82.
நுரையீரல் தொற்றுநோய் காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த வாலிக்கு திரை உலகினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Wednesday, July 17, 2013

‘திருமணம் நிச்சயம்.. அதுவும் குருவாயூர் கோயில்லதான்.. ஆனா இப்போ இல்ல!’






எனக்கு திருமணம் நடப்பது நிச்சயமான ஒன்றுதான். அதுவும் நான் விரும்பும் குருவாயூர் கோயிலில்தான் நடக்க வேண்டும் என விரும்புகிறேன், என்று நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாவனாவுக்கு குருவாயூர் கோயிலில் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது தவறான செய்தி என்று அவர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
“எனக்கு திருமணம் நடக்கப் போவது உண்மைதான். அதுவும் எனக்குப் பிடித்த குருவாயூர் கோயிலில் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் இப்போதல்ல. இன்னும் ஓராண்டு கழித்துதான் திருமணம் செய்வேன். மாப்பிள்ளை யார் என்றெல்லாம் இப்போது கூற முடியாது,” என்றார்.
பாவனா தமிழில் நடித்த கடைசி படம் அஜீத்தின் அசல். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் இல்லை. கன்னடம், மலையாளத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யுடன் காமெடியில் இணையும் வித்யு ராமன்


நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்திருப்பவர் வித்யு ராமன். இவர் அப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் கலக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திலும் சந்தானத்தின் காதலியாக நடித்து காமெடியில் ரசிக்க வைத்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஜில்லா’ படத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்திலும் வித்யு ராமன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் படங்களை ஓட விடாமல் தடுக்க சதி: டைரக்டர் பாண்டிராஜ்


சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். சத்யராஜும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்தை பொன்ராம் இயக்குகிறார். டி.இமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் தனுஷ் பங்கேற்று பேசும் போது சிவகார்த்திகேயனுக்கு நிறைய திறமைகள் இருப்பதை அறிந்தேன். எனவே தான் ‘எதிர் நீச்சல்’ படத்தில் அவரை நாயகனாக நடிக்க வைத்தேன். சிவகார்த்திகேயன் எனது தம்பி மாதிரி. அவர் மேன்மேலும் வளர வேண்டும் என்றார்.
டைரக்டர் பாண்டிராஜ் பேசியதாவது:-
திரையுலகில் டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் இருக்கிறார்களோ இல்லையோ நிறைய ஜோசியகாரர்கள் இருக்கிறார்கள். ஒரு படத்தை ஆரம்பிக்கும் முன்பே இது விளங்காது, தேறாது என்று ஜோசியம் சொல்லி விடுகிறார்கள்.
சிவகார்த்திகேயனை வைத்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தை எடுத்தேன். டி.வி.காரர்களை வைத்து படம் எடுத்தால் உருப்படாது என்றனர். படத்தை ஒருவர் பார்த்து விட்டு தயாரிப்பாளர் மதனை பயமுறுத்தினார். படம் ஓடவே ஓடாது என்றார். படம் தோற்றால் நான் ஏ.வி.எம்மில் செக்யூரிட்டி வேலைக்கு போய் விடுவேன். சிவகார்த்திகேயன் டி.விக்கு போய்விடுவார். தயாரிப்பாளர் மதன் எங்கே போவார் என்று கவலைப்பட்டேன். ஆனால் படம் நன்றாக ஓடி கோடி, கோடியாய் கொட்டியது.
இப்படம் ஓடாது என்றவர் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க அவரிடம் கால்ஷீட் கேட்டு அலைகிறார். இப்போது எனது அடுத்த படத்துக்கும் இதே வதந்தியை பரப்புகிறார்கள். அதையும் மீறி படம் ஓடும். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சிவகார்த்திகேயன், விமல், சூரி, சத்யராஜ், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பிரபு சாலமன், செந்தில் குமார் தயாரிப்பாளர் எஸ்.மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

என்னைப்பற்றி வதந்திகள்: நடிகை குஷ்பு ஆவேசம்


 நடிகை குஷ்பு படங்களில் தற்போது நடிக்கவில்லை. ‘கலகலப்பு’ என்ற படத்தை சமீபத்தில் தயாரித்து வெளியிட்டார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். தி.மு.க.வில் முன்னணி பேச்சாளராக இருந்து கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார். அவரது பேட்டியொன்று சர்ச்சையை கிளப்பிவிட்டது.
இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என செய்தி வெளியானது. பிறகு இதற்கு மறுப்பும் வந்தது.
ஆனாலும் குஷ்புவிடம் இது குறித்து அடிக்கடி பலர் விசாரிப்பதால் கோபமடைந்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் கூறும் போது, ‘என்னைப் பற்றி வந்த செய்தி வதந்தி என தெரிந்தும் அதனை நான் மறுக்க வேண்டும் என்று போன் மூலம் என்னிடம் வற்புறுத்துகின்றனர். இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நான் ஒன்றும் வேலை வெட்டி இல்லாமல் இருக்கவில்லை. இது ஜனநாயகநாடு. சிந்திக்கவும், தங்கள் விருப்பப்படி கருத்துக்களை கூறவும் மக்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே இந்த வதந்தி குறித்து விளக்கம் கேட்டு என்னிடம் யாரும் வரவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நான் ‘பிசி’யாக இருக்கிறேன்.
இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

Tuesday, July 16, 2013

இளையராஜாவும் ஏஆர் ரஹ்மானும் இணையும் பாடல்!






இசை ரசிகர்களுக்கு இது நிச்சயம் தெவிட்டாத இனிய செய்தியாகத்தான் இருக்கும். ஆம்.. இந்திய சினிமா இசையின் ஜாம்பவான்கள் இளையராஜாவும் ஏ ஆர் ரஹ்மானும் இணைந்து ஒரு பாடலை உருவாக்கப் போகிறார்கள்.

இது படத்துக்காக அல்ல… இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட! இந்தத் தகவலை தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவர் சி கல்யாண் தெரிவித்தார்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக இந்தப் பாடல் இடம்பெறவிருக்கிறதாம். இதனை இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் இணைந்து இசையமைத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என அவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள்.
இருவருமே இந்தக் கோரிக்கையை புன்னகையுடன் கேட்டுக் கொண்டாலும், இன்னும் அதுகுறித்து உறுதியான பதிலைச் சொல்லவில்லையாம்.
இதுகுறித்து கல்யாண் கூறுகையில், “பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜாவும், ஏ.ஆர் ரஹ்மானும் இந் நிகழ்ச்சிக்கென சிறப்பான ஒரு பாடலை இசையமைக்க இருக்கிறார்கள். இதுகுறித்து இருவரும் இன்னும் உறுதி செய்யவில்லை. ஆயினும், விரைவில் அந்த உன்னதமான பாடலைக் கேட்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிகழ்ச்சியின் இறுதி நாளன்று இந்தப் பாடல் அரங்கத்தில் நிகழ்த்தப்படும்,” என்றார்.

ஏய் இரண்டாம் பாகம்: நான்கு வேடங்களில் சரத்குமார்?






சரத்குமார் – நமீதா நடித்து சூப்பர் ஹிட்டான ஏய் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஏ வெங்கடேஷ்.

இந்தக் கதையில் சரத்குமார் நான்கு வேடங்களில் நடிப்பார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமீதாவின் கவர்ச்சி ப்ளஸ் காமெடி, வடிவேலுவின் வெடிச் சிரிப்பு மற்றும் சரத்குமாரின் ஆக்ஷன் போன்றவற்றால் இன்றும் பார்க்கப் பார்க்க திகட்டாத பொழுதுபோக்குப் படமாகத் திகழ்கிறது ஏய்.
சிங்கம் 2 படத்தின் வெற்றி, இப்போது ஏய் படத்துக்கும் இரண்டாம் பாகத்தை உருவாக்கத் தூண்டியுள்ளது. அதற்கான பக்கா ஸ்க்ரிப்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஏ வெங்கடேஷ்.
இந்தப் படத்தில் சரத்குமாரை நான்கு வேடங்களில் நடிக்க வைக்க இயக்குநர் வெங்கடேஷ் முயற்சித்து வருகிறார்.
நமீதா, வடிவேலு ஆகியோரையும் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இரண்டு கதாநாயகிகளும் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.
சரத்குமார் நான்கு வேடங்களில் நடிப்பது உண்மையா என இயக்குநர் வெங்கடேஷிடம் கேட்டபோது, ‘அதற்குத்தான் முயற்சி செய்து வருகிறோம். அவர் தேதிகளைப் பொறுத்துதான் எல்லாமே,” என்றார்

நயன்தாராவுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை தற்போது சமந்தாவுக்கு





சென்னை: நயன்தாரா எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதால் ஏற்பட்ட அதே பிரச்சனை தற்போது சமந்தாவுக்கும் ஏற்பட்டுள்ளது.

சமந்தா தமிழில் அவ்வப்போது நடித்து வந்தாலும் இன்னும் பெரிய நடிகை என்ற அளவுக்கு வரவில்லை. ஆனால் தெலுங்கிலோ முன்னணி நடிகையாக உள்ளார். இந்நிலையில் சமந்தா தமிழிலும் பெரிய ஹீரோயினாக வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
அதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது

விஜய் – எஸ்ஏசி.. இன்னும் தீராத பிணக்கு!


விஜய்க்கும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனுக்குமான பனிப்போர் இன்னும் தீரவில்லையாம்.
இருவருமே நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் அதிருப்திகளை வெளியில் கொட்டிவிடுகிறார்களாம். சமீபத்தில் நடந்த தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ் ஏ சந்திரசேகரன் பாதியில் கிளம்பிவிட்டது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 3 அன்று, விஜய்க்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தன் பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
செலக்டிவ்வாக கொஞ்சம் பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்திருந்தனர். “என்ன சார்… கூட்டம் குறைவா இருக்கு. விஜய் ரசிகர்களுக்கு அழைப்பு இல்லையா?” என்று ஒரு நிருபர் கேட்க, ”பிறந்த நாள்னாலே சிலருக்குப் பிடிக்க மாட்டேங்குதே… எதுக்கு கூப்பிட்டு கஷ்டப்படுத்தணும்” என்றார்.
இந்த முறை விஜய் தன் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. அதற்காக செய்யப்பட்டிருந்த அத்தனை ஏற்பாடுகளும் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு, ஜில்லா ஷூட்டிங்கில் உடன் வேலை செய்பவர்களுக்கு பிரியாணி பரிமாறி பிறந்த நாளை சுருக்கமாக விஜய் கொண்டாடியது நினைவிருக்கலாம்!

சிம்புவுடன் காதல் இல்லை: ஹன்சிகா






ஹன்சிகாவும், சிம்புவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன.

இருவரும் வேட்டை, மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தரிடம் இதுகுறித்து கேட்டபோது ஹன்சிகாவை சிம்பு திருமணம் செய்து கொள்ள விரும்புகினால் எதிர்க்கமாட்டேன் என கூறி இருந்தார். இந்த செய்தியை தெலுங்கு டி.வி.சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பின.
இதையடுத்து ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார். ஐதராபாத்தில் அவர் ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:–
சிம்புவுன் நானும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வெளியாகும் செய்திகளால் நான் வருத்தம் அடைந்துள்ளேன். எங்களுக்குள் காதல் இல்லை. நண்பர்களாத்தான் பழகுகிறோம்.
இரண்டு படங்களில் சேர்ந்து நடித்ததால் காதல் என்று வதந்தி பரப்பி உள்ளனர். என்னுடன் நடித்த மற்ற கதாநாயகர்களுடன் நான் எப்படி பழகுகிறோனோ. அப்படித்தான் சிம்புடனும் பழங்குகிறேன்.
சிம்புவை மணக்கப்போவதாக வெளியான செய்தியால் என்னை வைத்து படம் எடுக்கும் டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் கவலை அடைந்துள்ளனர். நான் இப்போது திருமணம் செய்து கொள்ளமாட்டேன். அதற்கு நிறைய காலம் இருக்கிறது.
எனது திருமணம் குடும்பத்தினர் விருப்பப் படித்தான் நடக்கும். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் மணப்பேன்.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
தமிழில் ஹன்சிகா நம்பர் ஒன் நடிகையாகி உள்ளார். நிறைய படங்கள் குவிகிறது. சமீபத்தில் அவர் நடித்து ரிலீசான சிங்கம்–2, தீயா வேலை செய்யனும் குமாரு படங்கள் ஹிட்டாகியுள்ளன.

ரஜினியுடன் நடிக்க ஆசை: பிரியாமணி






பிரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லை. தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்தி படத்தில் ஒருபாடலுக்கு குத்தாட்டம் ஆடி உள்ளார்.

பிரியாமணி கன்னடத்தில் நடித்த சாருலதா படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தமிழில் கடைசியாக நடித்த படம் இதுதான்.
ஹன்சிகா, டாப்சி, சமந்தா போன்றோர் வருகையால் பிரியாமணிக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. கார்த்தி, விஷால், தனுஷ் போன்றோருடன் ஜோடி சேர்ந்துள்ள இவர், ரஜினியுடனும் நடிக்க ஆசை உள்ளதாம்.
இதுகுறித்து பிரியாமணி கூறியதாவது:–
சூப்பர் ஸ்டார் ரஜினி ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது. கமலஹாசனுடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன். நான் ஷாருக்கான் ரசிகை. சிறு வயதில் அவரது படங்களை பார்த்து வளர்ந்தேன். எனவேதான் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட அழைத்ததும் ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு பிரியாமணி கூறினார்.

Monday, July 15, 2013

விஜய், பிரகாஷ்ராஜ் உதவியால் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த இயக்குநர் ரமணா.. குரலை இழந்தார்!



இயக்குநர் ரமணாவை நினைவிருக்கிறதா... திருமலை என்ற படத்தின் மூலம் துவண்டு கிடந்த விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியவர் மட்டுமல்ல, சினிமாவில் விஜய் தனக்கென ஒரு ரூட்டைப் பிடித்துப் பயணிக்க காரணமாகவும் அமைந்தவர். 

தொடர்ந்து ஆதி, தனுஷின் சுள்ளான் போன்ற படங்களை இயக்கியவர், குதிரை என்ற படத்தை ஆரம்பித்தார். ஆனால் அதன் பிறகு அவரைப் பற்றி தகவலே இல்லாமல் போனது. தமிழ் சினிமாவும் அவரை மறந்தே போனது. இதோ... மீண்டும் வந்திருக்கிறார் ரமணா.

 ஆனால் முன்பு போல கணீரென அவரால் பேச முடியவில்லை. காரணம், தொண்டைப் புற்று நோய் தாக்கியதில் கஷ்டப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டவரால், குரலை காப்பாற்ற முடியவில்லை. 

புற்று நோய்க்காக தீவிர சிகிச்சைப் பெற்று வந்த இவர், வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தார். தொண்டைக் குழி அருகே ஒரு பெரிய ஓட்டை போடப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இப்போது அவரது வாய்ஸ் பாக்ஸ் அகற்றப்பட்டுள்ளது. பூரண குணம் அடைந்திருக்கிறார். 

ஆனாலும், முன்புபோல பேச முடியவில்லை. தொண்டை ஓட்டையை அடைத்துக் கொண்டால் கிகிசுவென அவர் பேசுவது கேட்கிறது. ஆனால் நம்பிக்கையை மட்டும் அவர் இழக்கவில்லை.

 அடுத்த படத்துக்கான வேலைகளில் தீவிரமாகியுள்ளார். இவரது சிகிச்சைக்காக நடிகர் விஜய், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள்தான் பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

அஜீத் படத்துக்குப் பெயர் பறவை... இதுவாவது நிலைக்குமா?


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு பறவை என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 ஏஎம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த பிறகும் கூட இன்னமும் அதன் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. 

முதலில் இந்தப் படத்துக்கு வலை என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் அதனை இயக்குநர் விஷ்ணுவர்தன் மறுத்தார். எனவே தொடர்ந்து அஜீத் 53 என்றே இந்தப் படத்தைக் குறிப்பிட்டு வந்தனர் மீடியாவில்.

 இதோ அதோ என தலைப்பு சூடும் படலம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில் பறவை என அந்தப் படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


 ஆனால் இன்னமும் அதனை விஷ்ணுவர்தன் தரப்பு உறுதி செய்யவில்லை. இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆர்யா - டாப்ஸி இன்னொரு ஜோடி. சந்தானமும் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் பா விஜய் 5 பாடல்களை எழுதியுள்ளார்.

ஜெயம்ரவி ஜோடியாகும் நயன்தாரா


ஜெயம் ரவியும், நயன்தாராவும் புதுப்படத்தில் ஜோடி சேர்கின்றனர். ஏற்கனவே விஜய், சூர்யா, விஷால், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட பலருடன் நயன்தாரா நடித்துள்ளார். இப்போது முதல் தடவையாக ஜெயம் ரவியுடன் இணைகிறார்.
இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்குகிறார். இருவரும் ஜெயம், எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களில் சேர்ந்து இருந்தனர். இப்போது மீண்டும் இணைகிறார்கள்.
நயன்தாரா தற்போது அஜீத் ஜோடியாகவும், ஆர்யாவுடன் ராஜா ராணி படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்கள் முடிந்ததும் ஜெயம் ரவி படத்துக்கு வருகிறார். மெகா பட்ஜெட்டில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் ‘தலைவா’ படம் அடுத்த மாதம் ரிலீஸ்


விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள ‘தலைவா’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்து உள்ளார். இதில் சத்தியராஜ், சந்தானம், ராகிணி, உதயா, அபிமன்யுசிங், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ், மனோபாலா, சுப்பு, பஞ்சு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. அடுத்த மாதம் ‘தலைவா’ படம் ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் தெரிவித்தார். அவர் கூறியதாவது:–
‘தலைவா’ படம் சிறப்பாக வந்துள்ளது. முதல் பகுதி காதல், காமெடி என கலகலப்பாக இருக்கும். இடைவேளைக்கு பிறகு அதிரடியான ஆக்ஷனுக்கு மாறும்.
கடந்த தீபாவளிக்கு படப்பிடிப்பை துவக்கினோம். மும்பையில் அதிக செலவில் அரங்குகள் அமைத்து 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. சண்டை காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன. பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் சினிமாத்தனம் இல்லாதவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர். சிட்னியில் நிறைய பேரை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து சூட்டிங் நடத்தாமல் பணத்தை விரயம் செய்ததற்காக வருத்தப்பட்டார்.
‘தலைவா’ படத்துக்கான மிக்சிங், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் சென்னை மற்றும் மும்பை ஸ்டுடியோக்களில் விறு விறுப்பாக நடக்கிறது. அடுத்த மாதம் ஆகஸ்டு ரம்ஜான் பண்டிகையையொட்டி ‘தலைவா’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.
இப்படத்துக்கு சுனில், தினேஷ் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகி ஜெயிலில் இருந்தார். தற்போது ஜாமீனில் வந்துள்ள அவர் சினிமாவில் நடிக்கிறார். மலையாளத்தில் தயாராகும் பிக் பிக்கர் என்ற படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். காதல், காமெடி படமாக தயாராகிறது. இப் படத்தை பாலசந்திரகுமார் இயக்குகிறார்.
இதில் ஸ்ரீசாந்த் ஜோடியாக நடிக்க நாயகி தேர்வு நடக்கிறது. அசின் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என கருதி அவரிடம் பேசியதாகவும், ஆனால் ஸ்ரீசாந்துடன் நடிக்க மாட்டேன் என அவர் மறுத்து விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஸ்ரீசாந்துடன் பல வருடங்களுக்கு முன் விளம்பர படங்களில் நடித்த நடிகைகளை அவருடன் தொடர்பு படுத்தி செய்தி மற்றும் படங்கள் வந்தன. இதனால் அந்த நடிகைகள் மன உளைச்சலுக்கு ஆனார்கள். ஸ்ரீசாந்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று மறுப்பும் வெளியிட்டனர்.
இதுபோன்ற சர்ச்சைகள் வரும் என்பதாலேயே அசின் அவருடன் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு நடிகையை தேடுகிறார்கள்.

கௌதம் படம் தாமதம் – காரணம் சொல்கிறார் சூர்யா


கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாகச் சொல்லப்பட்ட துருவநட்சத்திரம் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. படம் கைவிடப்பட்டதாக தகவல். இல்லை, ஸ்கி‌ரிப்டில் கௌதம் வேலை பார்த்து வருகிறார் அதனால்தான் தாமதம் எனவும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் படம் ஏன் தாமதம் என்பதற்கு சூர்யா விளக்கமளித்திருக்கிறார்.
சிங்கம் 2 வுக்குப் பிறகு இரண்டு படங்கள் நடிக்கிறேன். கௌதம் படம் தாமதமாவதற்கு தொழில்நுட்பப் பிரச்சனைதான் காரணம், டெக்னிக்கலாக சில விஷயங்கள் தேவைப்படுகிறது என்று தெ‌ரிவித்துள்ளார். விரைவில் லிங்குசாமி படத்தில் நடிக்கயிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ஆக, கௌதம் படம் இன்னும் ட்ராப் ஆகவில்லை, லைவ்வில்தான் இருக்கிறது.

செல்வராகவனின் புதிய படம், ஹீரோ ராணா




இரண்டாம் உலகம் படத்துக்கு முன்னால் செல்வராகவன் இரண்டு படங்களைத் தொடங்கி இரண்டும் ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது. விக்ரம் நடித்த படம் ஒன்று. ஒரு வாரம் படப்பிடிப்புகூட நடத்தினார்கள். இன்னொன்று ராணா நடிப்பில் தொடங்கப்பட்டது. இந்தப் படம் படப்பிடிப்புக்கு போகாமலே கலைந்து போனது.
ராணா நடிப்பில் தொடங்குவதாக இருந்த படத்தை செல்வராகவன் முற்றிலுமாக கைவிடவில்லை. இரண்டாம் உலகத்துக்குப் பிறகு அந்தப் படத்தைதான் இயக்குகிறார். ராணா ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் இருமொழிகளில் படம் தயாராகிறது.
ராணா கைவசம் தற்போது இரண்டு படங்கள் உள்ளன. குணசேக‌ரின் ருத்ரம்மாதேவி, ராஜமௌலியின் பாகுபலி. இந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் கால்ஷீட் தந்திருப்பது செல்வராகவனின் படத்துக்கு.
ஹீரோயின், இசையமைப்பாளர், படத்தின் பெயர் போன்றவை இன்னும் முடிவாகவில்லை.

Varutha Padatha Valibar Sangam Press Meet Sathyaraj Speech


தனுஷின் மின்னல் வேகம்


ராஞ்சனாவுக்கு பிறகு தனுஷின் கவுண்டவுன் மீண்டும் ஸ்டார்ட் ஆகியுள்ளது. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியான ராஞ்சனா இந்தியில் அமோக வெற்றி பெற்றிருப்பதால் அடுத்து இந்தியில் எந்த மாதிரியான படம் பண்ணலாம் என்று ஆலோசித்து வருகிறார் தனுஷ்.
அதோடு, இந்தியில் நடிக்கிற முதல் படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து நடிப்பது என்ற முடிவை ஏற்கனவே எடுத்திருந்த தனுஷ், இப்போது முதல் வெற்றியினால் இதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் புதிய கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறார்.
அதனால், ராஞ்சனாவில் நடித்து முடித்து வந்தவர், மரியானை முடித்தது மட்டுமில்லாமல் இப்போது நய்யாண்டி படத்தையும் முடித்துக்கொடுத்து விட்டாராம். இன்னும் பாடல்கள் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். அடுத்த மாதம் கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பதால்தான் இந்த மின்னல் வேகமாம்.
அதையடுத்து புதிய இந்திப்பட வேலைகளும் தொடங்குவதால் கே.வி.ஆனந்த் படத்தை முடிக்கிற வரை அக்கம் பக்கம் அசைவதாக இல்லையாம் தனுஷ். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று படப்பிடிப்பில் கண்ணும் கருத்துமாக இருக்கப்போகிறாராம்.

சிவகார்த்திகேயன் படத்துக்கு கவுண்டமணி டயலாக் டைட்டீலாகிறது!

சமீபகாலமாக கதை பிரச்னையை விட டைட்டீல் பிரச்னைதான் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்பெல்லாம் ஒரு படத்தின் பூஜை போடும்போதே அதன் டைட்டீலை அறிவித்து விடுவார்கள். ஆனால் இப்போது பல படங்களுக்கு என்ன தலைப்பு என்பதே தெரியவில்லை.
குறிப்பாக, தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 53வது படத்துக்கு இப்போது வரை என்ன தலைப்பு என்பது தெரியாத நிலையில்தான் உள்ளது. ரிலீஸ் ஆவதற்குள்ளாவது அறிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்போம்.
இந்த நிலையில், எதற்கு புதுசா யோசிச்சு கஷ்டப்பட்டுக்கிட்டு என்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஒரு படத்துக்கு, வின்னர் படத்தில் கைப்புள்ளயாக நடித்த வடிவேலு நடத்திய “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்பதையே டைட்டீலாக்கியுள்ளனர்.
அதையடுத்து இப்போது, அவரது இன்னொரு படத்துக்கு “கரகாட்டக்காரன்” படத்தில் ஒரு ஓட்டக்காரை தள்ளிக்கொண்டு திரிவார்களே அந்த காரை யாருடையது என்று ஒருவர் கேட்க, அதற்கு கவுண்டமணி…. நடிகை சொப்பன சுந்தரியோட கார் என்பார்.
அப்போது, செந்தில் அவரது காதுக்குள் சொப்பன சுந்தரி வச்சிருந்த காரை நாம வச்சிருக்கோம். இப்ப அந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கான்னு கேட்பாரு. அதற்கு செந்திலை பளார் என ஒரு அறை விட்டபடி, யாரு யார வச்சிருக்கானு தெரிஞ்சிக்கிறதா என் வேலை என்பார்.
அப்படி பிரபலமாக பேசப்பட்ட அந்த “சொப்பன சுந்தரி” என்ற பெயரையே இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும இன்னொரு படத்துக்கும் வைத்திருக்கிறார். ஆக, கவுண்டமணி, வடிவேலு போன்ற காமெடியன் படம் இருக்கிறவரை நம்மூர் ஹீரோக்களின் படங்களுக்கு டைட்டீல் பிரச்னையே இருக்காது என்று சொல்லலாம்.

இந்தியில் படம் இயக்க ஆசைப்படும் கமல்!


விஸ்வரூபம் படம் மூலம் உலக அளவில் பேசப்படும் இயக்குனர், நடிகர் ஆகி விட்டார் கமல். அந்த படம் சர்ச்சைக்குரியதாக பேசப்பட்டாலும், அவரது கருத்துக்கள் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில். இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடிக்கும் தருவாயில் இருக்கிறார் கமல்.
முந்தைய பாகம் சர்ச்சைகளை கிளப்பியதால்,. இந்த முறை எந்த மாதிரி இயக்கியிருக்கிறாரோ என்று விஸ்வரூபம் 2வை எதிர்பார்த்து ஒரு கூட்டமே காத்திருக்கிறது. ஆனால், கமல் ரொம்ப தெளிவானவர், இந்த முறை சிக்கலில் அவரை அத்தனை எளிதில் யாரும் சிக்க வைத்து விட முடியாது என்றும் சிலர் பேசிக்கொள்கிறார்க்ள். அதற்கேற்ப அவரும், இரண்டாம் பாகத்தில் சர்ச்சைகளை குறைத்து ரொமான்சுக்கு முதலிடம் கொடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், தமிழில் நேரடி படங்களை இயக்கி வரும் கமல், எப்போது இந்தியில் படம் இயக்குவார் என்ற கேள்விகளும் எழுந்திருக்கிறது. அதற்கு கமல் பதில் அளிக்கையில், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளிலும் படம் இயக்கும் ஆசை உள்ளது. அதிலும். விஸ்வரூபம் 2 வை இயக்கிய பிறகு இந்தியில் படம் இயக்க தயாரிப்பாளர் கிடைத்தால் ரொம்ப சந்தோசமாக ஹாலிவுட்டுக்கு இணையாக இன்னொரு வித்தியாசமான படத்தை கொடுப்பேன் என்கிறார் கமல்.

ஆகஸ்ட் 3ல் இரண்டாம் உலகம் ஆடியோ ரிலீஸ்


ஆர்யா நடித்து வரும் இரண்டாம் உலகம் படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. மயக்கம் என்ன படத்திற்கு பிறகு டைரக்டர் செல்வராகவன் இயக்கி வரும் படம் இரண்டாம் உலகம்.
இப்படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், அனுஷ்கா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இருவரும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.வி.பி. சினிமாஸ் சார்பில் பிரசாத் வி.பொட்ரிலு இப்படத்தை பிரமாண்ட முறையில் தயாரித்துள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடும் எண்ணத்தில் இருக்கின்றனர் படக்குழுவினர். அதற்கு முன்பாக படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சென்னையில் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி பிரமாண்டமாக நடத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பி.வி.பி. சினிமாஸ் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.