பாலா பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடிக்கமாட்டேன்: நடிகை பூஜா ‘ஜே ஜே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா. தொடர்ந்து ‘பொறி’, ‘நான் கடவுள்’ ஆகிய படங்களில் நடித்தார்.
அதன்பின், நான்கு ஆண்டுகளாக எந்தவொரு சினிமாவிலும் நடிக்காமல் இலங்கைக்கு பறந்து போனார். தற்போது மீண்டும் திரும்பி வந்துள்ளார். தற்போது ‘விடியும் முன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. இதில் பூஜா கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:
என்னுடைய முழு பெயர் பூஜா கௌதமி உமா சங்கர். தமிழ் சினிமாதான் என் பெயரை சுருக்கி பூஜா என மாற்றிவிட்டது. ‘நான் கடவுள்’ படத்திற்கு பிறகு பூஜா எந்த மாதிரியான கதாபாத்திரம் பண்ணப் போகிறார். இனிமேல், பூஜா நான் கடவுளைவிட நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று அனைவரும் கூறினர்.
ஏனோதானேவென்று கதையை செலக்ட் செய்து நடித்தால், எனக்கு நான் கடவுள் படத்தில் வாய்ப்பு தந்த பாலா திட்டி தீர்த்துவிடுவார். இந்த பொண்ணுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்தேன். ஆனால், அதை அந்தப் பொண்ணு தூக்கி எறிந்துவிட்டு சாதாரணமாக நடித்துக் கொண்டிருக்கிறது என்று திட்டுவார். எனவே, அவருக்கு களங்கம் ஏற்படாதவாறு நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுக்க நேரம் ஒதுக்கினேன்.
இந்நிலையில், என்னுடைய பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இலங்கைக்கு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன். துரதிருஷ்டவசமாக பாட்டி இறந்துவிட்டார். பாட்டியின் கடைசி காலங்களில் அவருடன் இருந்ததை பாக்கியமாக கருதுகிறேன்.
இதற்கிடையில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் நிறைய வந்தன. ஆனால், பாட்டியின் உடல்நிலை கருதி படங்களை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டேன். தற்போது ‘விடியும் முன்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதுவரை கைநழுவிப் போன படங்களையெல்லாம் பிடிக்க இப்படம் ரொம்பவும் உதவும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment