Friday, June 21, 2013

இவற்றில் எந்தப் படத்தைதான் பண்ணுவார் சூப்பர் ஸ்டார்?

கடந்த சில தினங்களாக ரஜினி கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பார் என்றும், இல்லையில்லை ஷங்கர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. 

                          ஆனால் இரண்டையுமே ரஜினி தரப்பிலோ சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் தரப்பிலோ ஒருவரும் உறுதிப்படுத்தவில்லை.

                  சில தினங்களுக்கு முன் ஒரு வார இதழ், கோச்சடையான் படம் முடிய இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுவதால், அதற்கு முன் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி ஒரு படம் நடிக்கப் போவதாகவும், இரண்டு மாதங்களில் இந்தப் படம் முடிந்து விடும் என்றும், அந்தப் படம் எடுத்து முடிக்கும் வரை விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. 

                                               இந்த செய்தி தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தபோதே, முன்னணி ஆங்கில நாளிதள் ஒன்று தன் பங்குக்கு இன்னொரு பரபரப்பைக் கொளுத்திப் போட்டது.

                               இயக்குநர் ஷங்கர் ரஜினியைச் சந்தித்து ஒரு ஒன்லைன் சொன்னதாகவும், அது பிடித்துப் போய், அடுத்த படமாகவே இதைச் செய்யலாம் என ரஜினி சொன்னதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது. இந்த 

இரண்டு செய்திகளுமே உண்மையாக வாய்ப்பிருக்கிறதா? 


ரஜினி தரப்பில் விசாரித்தால், 'அவரையும் அவர் படங்களையும் பற்றி தினமும் அவரவர் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள். ஒருவரும் குறைந்தபட்சம் விசாரிக்கக் கூட முயற்சிப்பதில்லை. இந்த பரபரப்பு எப்படி கிளம்பியதோ அப்படியே மறந்தும்போகும். அதனால்தான் அதைப் பற்றி நாங்கள் அலட்டிக் கொள்வதில்லை. புதிய செய்தி ஏதாவது இருந்தால் அதை அதிகாரப்பூர்வமாக ரஜினி சாரே தருவார்," என்கிறார்கள்.

நேரமே சரியில்லை: மீண்டும் மதுரைக்கே சென்றுவிட்ட வடிவேலு

சென்னை: ஜெகஜால புஜ பல தெனாலிராமன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிடைக்காததால் வடிவேலு மதுரைக்கே சென்றுவிட்டாராம். அரசியல் கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கி தேமுதிக தலைவர் விஜயகாந்தை தாறுமாறாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார் வடிவேலு. தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வர தேமுதிக எதிர்கட்சியானதால் வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சினிமாவை விட்டு விலகி 2 ஆண்டுகளாக மதுரையில் இருந்தார். இந்நிலையில் 2 ஆண்டுகள் கழித்து ஜெகஜால புஜ பல தெனாலிராமன் படத்தில் நடிக்க சென்னைக்கு வந்தார். அந்த படத்தை ஒழுங்காக திட்டமிடாததால் ஒரே குளறுபடியாம். முதலில் படத்தை ஒளிப்பதிவு செய்த சகாதேவன் ஷூட்டிங்கில் நடந்த குளறுபடிகளால் டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டாராம். அடுத்ததாக கோபிநாத் வந்தார் அவரும் வந்தவேகத்தில் சென்றுவிட்டார். மூன்றாவதாக விஜய் மில்டன் ஒளிப்பதிவை கவனிக்க வந்தார். என்ன நடந்ததோ அவரும் சென்றுவிட்டார். இதனால் தற்போது ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் திணறுகிறார்களாம். இதையெல்லாம் பார்த்த வடிவேலு அப்செட்டாகி மீண்டும் மதுரைக்கே சென்றுவிட்டாராம்.

தீயா வேலை செய்யணும் குமாரு - விமர்சனம்

நடிகர்கள்: சித்தார்த், சந்தானம், ஹன்சிகா, கணேஷ் வெங்கட்ராம் 

ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்

இசை: சத்யா

பிஆர்ஓ : ஜான்சன்

 தயாரிப்பு: யுடிவி

இயக்கம்: சுந்தர் சி 

வழக்கமான காமெடி ப்ளஸ் ரொமான்டிக் கதையை புத்தம் புது ஹைடெக் பாலீஷில் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி, தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படம் மூலமாக. சும்மா சொல்லக்கூடாது.. முதல் காட்சியிலிருந்து, கடைசி காட்சி வரை அந்த கலகலப்பு குறையாமல், எந்தக் காட்சியிலும் எழுந்து போகவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் சுந்தர் (பாடல் காட்சியில் கூட ஹன்சிகாவுக்காக அப்படியே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கிறார்கள் மக்கள்... ரசிகன்டா!).

ஐடி எஞ்ஜினீயர் சித்தார்த்துக்கு கூட வேலை பார்க்கும் ஹன்சிகா மீது காதல். ஆனால் அதை சொல்லத் தயங்கி, ஐடியா மணியான சந்தானத்திடம் (பேரு மோக்கியா!) போகிறார். அந்த ஐடியாவை ஒர்க் அவுட் பண்ணப் பார்க்கும்போது, கணேஷ் ஹன்சிகாவை உஷார் பண்ணப் பார்க்கிறார். கணேஷ் - ஹன்சிகா காதலிக்காமலிருக்க கொஞ்சம் கிக்கிரி பிக்கிரி வேலை பார்க்கிறார்கள் சந்தானமும் சித்தார்த்தும். விளைவு... ஹன்சிகாவுடன் காதல் ஒர்க் அவுட் ஆகிறது சித்தார்த்துக்கு. அப்புறம்தான் தெரிகிறது சந்தானத்தின் தங்கைதான் ஹன்சிகா என்பது. இப்போது ஹன்சிகா - சித்தார்தைப் பிரிக்க சந்தானம் ஏகப்பட்ட திட்டம் போடுகிறார். அதைத் தாண்டி இருவரும் சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்! ஐடி இளைஞன் வேடம் முற்றிப் போன சித்தார்த்துக்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை. அவரும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு என்னென்னமோ செய்கிறார். ஆனால் அவ்வளவாக எடுபடவில்லை. சந்தானம் வந்தால்தான் சித்தார்த் காட்சிகளை ரசிக்க முடிகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! படத்தின் ஹீரோ கிட்டத்தட்ட சந்தானம்தான். ஆனால் அவரது கேரக்டர் அப்படியா மைடியர் மார்த்தாண்டனில் வரும் கவுண்டமணியின் Extended Role! என்ன.. அதில் ஒரு ஐடியாவுக்கு கட்டுக்கட்டாக காசு வாங்குவார் கவுண்டர்... சந்தானம் இதில் க்ரெடிட் கார்ட் தேய்க்கச் சொல்கிறார். ஆயிரம் சொல்லுங்க.. ஒரிஜினல் ஒரிஜினல்தான்! ஹன்சிகாவை இதுவரை யாரும் இப்படி செக்ஸியாக எக்ஸ்போஸ் பண்ணதில்லை என்று சொல்ல வைத்திருக்கிறார் சுந்தர் சி. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு நிஜமாகவே கண்களுக்கு இதம். அட, சுந்தர் சி படமாய்யா இது என்று கேட்க வைக்கின்றன பல ஷாட்கள்!

Thursday, June 20, 2013

இன்று தலைவா இசை... விஜய் - அமலா பால் பங்கேற்பு

சென்னை: விஜய் நடித்துள்ள தலைவா படத்தின் இசை இன்று  வெளியாகிறது. நாளை  விஜய் பிறந்த தினம் என்பதால், இன்று இசை வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தவிருக்கிறார்கள். இயக்குநர் விஜய்யும் - நடிகர் விஜய்யும் முதன் முதலாக கைகோர்த்த படம் தலைவா. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். சத்யராஜ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்று மாலை சென்னையில் நடக்கிறது. தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய், அமலா பால், சத்யராஜ் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். தலைவா படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் பாடும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் வெளியீட்டுக்கு முன்பே பிரபலமடைந்துள்ளது. இந்தப் படத்தின் விற்பனை உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் இதனை வெளியிடுகிறது. 

மிஷ்கினை வெளியே போகச் சொன்ன இளையராஜா

சென்னை: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக இசையமைக்கக் கோரி தன்னிடம் வந்த இயக்குநர் மிஷ்கினை முதலில் வெளியே போகச் சொன்னாராம் இசையமைப்பாளர் இளையராஜா. இளையராஜாவின் மிகத் தீவிரமான ரசிகர்களுள் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். மிஷ்கின் - இளையராஜா இணைந்த முதல் படம் நந்தலாலா. அந்தப் படத்துக்கு அருமையான பின்னணி இசையும், அற்புதமான பாடல்களும் தந்திருந்தார் ராஜா. ஆனால் இரண்டு பாடல்களை மட்டும் பயன்படுத்திக் கொண்டு மீதியை சிடியில் மட்டும் வைத்துக் கொண்டார் மிஷ்கின். இடையில் யுத்தம் செய், முகமூடி என இரண்டு படங்களைச் செய்திருந்தார் மிஷ்கின். இவற்றுக்கு இசையமைத்தவர் கே எனும் இளைஞர். இவரும் ராஜா ரசிகர்தான். முகமூடி படத்தில் வரும் ஒரு பாட்டில், 'ராஜா இல்லாத சங்கீதமா' என ஒரு வரியே இடம்பெற்றிருக்கும், பின்னணியில் அன்னக்கிளி இசை ஒலிக்க. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக மீண்டும் இளையராஜாவைத் தேடிப் போன போது ஏற்பட்ட அனுபவம் குறித்து மிஷ்கின் கூறுகையில், "முதலில் என்னை பார்த்தவுடன் வெளியே போ என்றுதான் சொன்னார். நந்தலாலா படத்தில் அவரது பாடல்களை உபயோகிக்கவில்லை என்ற வருத்தத்தை உணர்ந்த நான் அதற்கான காரணங்களை சரிவர விளக்கிய பின்னர் ஒரு மூத்த சகோதரர் போல் கேட்டுக் கொண்டார். பின்னர் தயங்கி தயங்கி இப்படத்தில் பாடல் இல்லை என்று சொன்னதும் சற்றே அதிர்ச்சியடைந்தவர் பின்னர் கதையை முழுமையாகக் கேட்ட பின்னர் முழு சம்மதம் எனச் சொன்னார். இப்படத்தின் முன்னணி இசைதான் படத்தின் பிரதானம் என்று இருவரும் உணர்ந்து பணியாற்றத் தொடங்கி விட்டோம் . பின்னணி இசை என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. திரையில் நாம் படம் பார்க்கும் முன்னரே நம் செவியில் வந்து விழும் இசையை எப்படி பின்னணி இசை என்பது. அது முன்னணி இசைதானே... தவிர இசைஞானி என்றுமே முன்னணிதான். பாடல் இல்லையென்றாலும் இது அவரது ராஜாங்கமே! இப்படத்தில் கதாநயாகியும் இல்லை. அது கதை எடுத்தமுடிவு. நான் எடுத்த முடிவு அல்ல. இந்த படத்தின் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருப்பதன் கூடுதல் பலமே சில முடிவுகளை எடுக்க சுதந்திரம் இருப்பதுதான். என்னுடைய நிறுவனமான லோன் வுல்ஃப் சார்பில் தயாரிக்கப்படும் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ' உங்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும் ஒரு த்ரில்லர் படமாகும். பெரும் பகுதி சென்னையை சுற்றி இரவு நேரத்தில் மட்டும் படமாக்கப்பட்டது. வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் பிரமாதமாக நடித்து இருந்த ஸ்ரீ இப்படத்தில் பாதிக்க பட்ட கல்லூரி மாணவனாக வாழ்ந்து காட்டி இருக்கிறான். படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் உள்ள இப்படத்தின் வெளியீடு செப்டம்பர் இறுதியில் இருக்கும்," என்றார். 

Wednesday, June 19, 2013

சமுத்திரகனியுடன் இணைகிறார் ஜீவா!



முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களின் தோல்வியில் இருந்து மீள்வதற்காக வெற்றிப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களை நாடி வருகிறார் ஜீவா. தற்போது யான், என்றென்றும் புன்னகை என இரண்டு படங்களில் நடித்து வந்தாலும், இதே வேகத்தில் மேல்தட்டு இயக்குனர்களின் படங்களிலும் கமிட்டாகி விட வேண்டும் என்று நினைக்கிறார்.
இப்படி அவர் தீவிரமாக கதை கேட்டு வந்த நேரம்தான், பகலவன் கதையை சீமான் சொன்னார். ஆனால் பிடிக்கவில்லை என்று தவிர்த்து விட்டார் ஜீவா. அதையடுத்து நாடோடிகள், போராளிகள் படத்தை இயக்கிய சமுத்திரகனியை நாடியுள்ளார். தற்போது ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடிக்கும் நிமர்ந்து நில் படத்தை இயக்கும் சமுத்திரகனி, பெரிய ஹிட் கொடுக்கவில்லை என்றாலும், மீடியம் ரேஞ்ச் படத்தையாவது கொடுத்து காப்பாற்றி விடுவார் என்பதால், அவரிடம் தன்னை வைத்து ஒரு படம் பண்ணுமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம்.
அதற்கு, நிமிர்ந்து நில் பட வேலைகள் சென்று கொண்டிருக்கிறது. இப்படம் திரைக்கு வந்ததும் நாம் இணைவது பற்றி யோசிப்போம் என்று கூறியுள்ளாராம் சமுத்திரகனி. அவரது வார்த்தையை நம்பி இப்போது வேறு புதிய படங்களில் கமிட்டாகாமல் இருக்கிறார் ஜீவா.

தீயில் கருகியது மணிரத்தினத்தின் சினிமா குடோன்

சென்னை: இயக்குநர் மணிரத்தின் திரைப்படப் பொருட்கள் தயாரிப்புக் கூடம் தீவிபத்தில் சிக்கிய சேதமடைந்தது. இந்த கிட்டங்கியானது தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடிய தீயை அணைத்தனர். இருப்பினும் கிட்டங்கி முழுவதுமாக எரிந்து போய் விட்டது.

கோச்சடையானுக்கு முன்பே ரஜினியின் புதுப் படம் - கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார்!

சென்னை: கோச்சடையான் படத்துக்கு முன்பாக ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கப் போவதாகவும், இதுகுறித்த ஆலோசனை தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வருகிறது ‘கோச்சடையான்'. இதில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் படத்தின் ட்ரைலரே இன்னும் வெளியாகவில்லை. காரணம், ரஜினி எதிர்ப்பார்த்த சர்வதேச தரத்துக்கு ஏற்ப படத்தை மெருகேற்ற இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே கோச்சடையான் படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரஜினி. கோச்சடையான படம் தொடர்ந்து தள்ளிப் போவதுதால் ரசிகர்கள் சோர்ந்து போகாமலிருக்கவே இந்த முடிவு என்கிறார்கள். இந்தப் படத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார்தான் இயக்குகிறார். அண்மையில் இது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் அழைத்து பேசிய ரஜினி, ‘முத்து', ‘படையப்பா' பாணியில் காமெடி, அதிரடி கலந்த கதையை தயார் செய்யச் சொல்லி இருக்கிறாராம். மேலும் படத்தை இரண்டு மாதத்தில் முடித்துவிட வேண்டும் என்றும் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகுதான் படம் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அப்போது கண்டிஷனும் போட்டிருக்கிறார். ஏற்கெனவே இருவரும் இணைந்த படங்களான ‘ஜக்குபாய்', ‘ராணா' ஆகிய இரண்டு படங்களும் பூஜையுடன் நின்றுவிட்டன. அதனால் இந்தமுறையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக படம் பற்றிய அனைத்து தகவல்களையும் மிக ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்களாம். 

Tuesday, June 18, 2013

ஜெய்ஹிந்த் 2 – அர்ஜுன் செய்த மாற்றம்

தமிழில் பார்ட் 2 எடுப்பது அதிகரித்திருக்கிறது. சிங்கம் 2, விஸ்வரூபம் 2 வுக்குப் பிறகு இப்போது ஜெய்ஹிந்த் 2. இந்த இரண்டாம் பாகத்தை அறிவித்து படப்பிடிப்பையும் அர்ஜுன் தொடங்கிவிட்டார்.
பார்ட் 2 என பெயரிட்டாலும் ஜெய்ஹிந்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் கதைரீதியாக மட்டுமின்றி கதாபாத்திர ரீதியாகவும் எந்தத் தொடர்பும் இல்லையாம். அனைத்தும் புத்தம் புதுசு. முதல் பாகத்தில் அர்ஜுன் ஜோடி ரஞ்சிதா. இப்போது ரஞ்சிதாவை போட முடியுமா? சுர்வீனை நாயகியாக்கியிருக்கிறார்.
அதேபோல் முதல் பாகத்தில் காமெடி ஏரியாவை கவனித்தவர் கவுண்டமணி. அவரின் பகல்தூக்க காமெடி இன்றும் பிரபலம். கவுண்டமணியின் மார்க்கெட் ஒரேயடியாக சாய்ந்துவிட்டதால் அவருக்குப் பதில் பிரம்மானந்தத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார். பிரம்மானந்தம் என்றால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் கவராகும் என்பதால் இந்த ஏற்பாடு

அம்மா வேடங்களில் நடிக்க தயார்: சிம்ரன்

தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சிம்ரன். ‘நேருக்கு நேர்’, ‘நட்புக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’, ‘பம்மல் கே.சம்பந்தம்’ உள்பட பல ஹிட் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.
2003-ல் தீபக் பக்கா என்பவரை மணந்தார். தற்போது அவருக்கு அதீப், ஆதித் என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சிம்ரனுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. கதாநாயகியாக யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஐந்தாம்படை’ படத்தில் அண்ணி கேரக்டரில் நடித்தார். தற்போது சூர்யாவுடன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அக்காள் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது.
அம்மா வேடத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் சிம்ரன் மறுத்து விட்டார். இப்போது அந்த பிடிவாதம் தளர்ந்துள்ளது. இளம் கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிக்க தயார் என்று அறிவித்துள்ளார்

பி. வாசுவுடன் ஹாலிவுட் செல்ல மறுத்த விஜய்?

சென்னை: பி. வாசு இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் பி. வாசு கரி இன் லவ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்குகிறார். படத்தின் நாயகி சோனம் கபூர். இதில் சோனமின் தந்தை அனில் கபூரும் நடிக்கிறாராம். இது குறித்து பி. வாசு கூறுகையில், கரி இன் லவ் தெய்வீக சக்திக்கும், தீய சக்திக்கும் இடையேயான பேய் படம். இதில் இந்திய நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு மதுரை, காஞ்சீபுரம், மைசூர், கேரளா மற்றும் வெளிநாட்டில் நடக்கிறது என்றார். ஹாலிவுட் கனவுகளுடன் இருக்கும் இந்திய இளைஞன் ஒருவன் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு ஆவி இருந்து கொண்டு வெளியே செல்ல மறுக்கிறது. சிறு வயிதிலேயே முடிவான நாயகன், நாயகியின் திருமணம் என்று கதை செல்கிறது. சோனம் கபூர் தான் நாயகி. அவரது தந்தை அனில் கபூர் அமெரிக்காவில் தொழில் அதிபராக வருகிறார். படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜான் வொயிட், நிக் நோல்டி, டினா ஃபே, சூசன் என்கிற சத்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்திரமுகி படத்தைப் பார்த்த பிறகு கரி இன் லவ் படத்தை இயக்க பி. வாசு தான் சரியானவர் என்று நினைத்ததாக தயாரிப்பாளர் ராஜ் திருச்செல்வன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செட்டிலான இலங்கை தமிழரான திருச்செல்வன் ஏற்கனவே 2 ஹாலிவுட் படங்களை தயாரித்துள்ளார். வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்குமாம். படத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விஜய் நாயகனாக நடிக்கிறார் என்று இருக்கிறது. ஆனால் விஜய் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விஜய்க்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறதாம்.

ரஜினி பற்றி நான் சொன்னதை தப்பா எழுதிட்டாங்க - நிருபர் மீது தனுஷ் வருத்தம்

சென்னை: ரஜினிக்கு மருமகனாக இருப்பதால் தனக்கு எந்த பலனும் இல்லை என்று தான் சொன்னதாக வந்தது தவறு என்றும், தான் சொன்னதை தவறாக எழுதிவிட்டார்கள் என்றும் தனுஷ் கூறியுள்ளார். ரஜினி பற்றி தனுஷ் அடிக்கடி எதையாவது பேசி வைப்பதும், பின்னர் அதற்கு விளக்கம் சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது. முன்பு ஒரு முறை, ரஜினிக்கு மருமகனாக இருப்பது தனக்கு மைனஸ்தான் என்று ஒரு இணையதளத்துக்கு பேட்டி கொடுத்து, பின்னர் அதை மறுத்திருந்தார் தனுஷ். இப்போதும் கிட்டத்தட்ட அதே போல பேச ஆரம்பித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிக்கு மருமகனாக இருப்பதால் எனக்கு எந்தப் பலனுமில்லை என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இன்று அதை மறுத்துள்ளார் தனுஷ். இன்று சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த அம்பிகாபதி பிரஸ் மீட்டில், அவரிடம் இதுகுறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தனுஷ், "நான் சொன்னதை தவறான பொருளில் எழுதியுள்ளார் அந்த நிருபர். அவர் யார் என்று தெரியவில்லை. ரஜினியின் மருமகனாக இருப்பது எனக்கு பலமும் இல்லை, பலவீனமும் இல்லை என்றுதான் நான் கூறியிருந்தேன். இதை தனக்கு ஏற்ற மாதிரி எழுதியுள்ளார் அந்த நிருபர். ரஜினி அவர் வேலையில் பிஸியாக இருக்கிறார். நான் என் வேலையில் பிஸியாக இருக்கிறேன். அதே நேரம் அவரோடு என்னை ஒப்பிடுவது தவறு. நான் இருபத்தைந்து படங்கள்தான் பண்ணியிருக்கிறேன். அவரோ சினிமாவின் முகமாக இருக்கிறார். அவருடன் என்னை ஒப்பிடக் கூடாது," என்றார்.

Monday, June 17, 2013

அமராவதி படத்திற்கு அஜீத்தை பரிந்துரைத்த எஸ்.பி.பி.

சென்னை: அஜீத் குமார் என்ற புதுமுக நடிகர் மீது நம்பிக்கை வைத்து அவரை அமராவதி படத்தில் எடுக்குமாறு இயக்குனர் செல்வாவுக்கு பரிந்துரை செய்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
அஜீத் குமார் என்ற நடிகரை திரையுலகிற்கு அடையாளம் காட்டிய படம் அமராவதி. ஒல்லியான உருவம், அரும்பு மீசை வைத்திருந்த அஜீத் என்ற புதுமுக நடிகர் ஹீரோவாக அறிமுகமான படம் அமராவதி. அவருக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார்.
இந்த படத்தை இயக்கிய செல்வா கூறுகையில்,
நான் அஜீத்தை முதன்முதலில் பார்த்ததுமே தமிழ் சினிமாவின் அழகிய ஹீரோவாக இவர் வருவார் என்று நினைத்தேன். அமராவதி படத்திற்கு அவரை எனக்கு பரிந்துரை செய்ததே பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான். அஜீத்தை வைத்து கிரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் எடுக்கவிருந்தேன். ஆனாால் அது முடியாமல் போனது.
எனது படங்களில் புதுமுகங்கள் தேவைப்படுவதால் மீண்டும் அஜீத்துடன் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை என்றார்.

ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா- யுவன்!


சென்னை: இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கிறார்கள். இந்தப் படத்துக்கு கர்ரி இன் லவ் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பி வாசு இயக்கவிருக்கிறார். நடிகர் விஜய் - சோனம் கபூரை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கர்ரி இன் லவ் படத்தின் கதை திரைக்கதையை அமெரிக்க தமிழரான ராஜ் திருச்செல்வன் எழுதியுள்ளார். இளையராஜா ஏற்கெனவே ரஜினி நடித்த ஹாலிவுட் படமான ப்ளட் ஸ்டோனுக்கு இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் அவர் பாடல்கள் பாடி இருந்தாலும், அப்பாவும் மகனும் இணைந்து ஒரு படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல் முறை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. 

Sunday, June 16, 2013

கோவில் கும்பாபிஷேகத்தில் சூர்யா, கார்த்திக்கு பரிவட்டம்

கோவை: கோவையில் உள்ள கோவில் திருவிழா ஒன்றில் சூர்யாவுக்கும், கார்த்திக்கும் பரிவட்டம் கட்டப்பட்டது. சிவகுமார் குடும்பம் கோவை அருகே உள்ள காசிகவுண்டன்புதூரைச் சேர்ந்தது. அந்த ஊரில் உள்ள கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகுமார் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார். சிவகுமார் தலைமையில் நடந்த விழாவில் கணபதி ஹோமம், யாகசாலை உள்ளிட்டவை நடத்தப்பட்டது. பூஜைகள் முடிந்த பிறகு சூர்யா மற்றும் கார்த்திக்கு பரிவட்டம் கட்டி கௌரவிக்கப்பட்டடது. இதையடுத்து அவர்கள் இருவரும் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். சூர்யாவின் சிங்கம் 2 படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக அவர் கௌதம் மேனன் மற்றும் லிங்குசாமி படங்களில் நடிக்கிறார். கார்த்தி பிரியாணி, ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 


ரஜினிகாந்த் மருமகனாக இருப்பதால் புண்ணியமில்லை: தனுஷ்


மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக இருப்பது தனக்கு உதவியும் இல்லை, உபத்திரமும் இல்லை என்று தனுஷ் தெரிவித்துள்ளார். தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனுஷ் தனது முதல் இந்தி படமான ராஞ்ஹனா குறித்தும், ரஜினி குறித்தும் கூறுகையில், சூப்பர் ஸ்டாரின் மருமகனாக இருப்பதால் எனக்கு எந்த உதவியும் இல்லை. நான் எனது வேலையை செய்து வருகிறேன். ரஜினியின் மருமகன் என்பது எனக்கு எந்த உதவியும் இல்லை, அது என்னை பாதிக்கவும் இல்லை. நான் நடிக்கும் முறை அவருடையது போன்று இல்லை. அதனால் ஒப்பிட வேண்டியதில்லை. 20 முதல் 25 படங்களில் நடித்த ஒருவரை ஒரு பெரிய நடிகருடன் ஒப்பிடுவது சரி அல்ல. என்னுடைய முதல் இந்தி படமான ராஞ்ஹனா பற்றி அவரிடம்(ரஜினி) பேசியதில்லை. நான் எப்படி என் வேலையில் பிசியாக உள்ளேனோ அதே போன்று அவரும் அவருடைய வேலையில் பிசியாக உள்ளார். அதனால் இந்த படம் குறித்து இதுவரை நாங்கள் பேசவில்லை. ஐஸ்வர்யா இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. நான் ஆனந்த் சாருடன் சேர்ந்து மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் நானும் ஒருவனாக இருப்பேன் என்றார்.