Sunday, August 18, 2013

பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு பாராட்டு விழா நடத்த பேரரசு வேண்டுகோள்

ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில் இ.பாலசுப்பிரமணி, ஜி.ஆர்.உஷாரவி தயாரிக்கும் படம் `நூறாம் நாள்’. இதில் நாயகனாக விஜய் சிரஞ்சீவி, நாயகியாக சாய்னா நடிக்கின்றனர். இன்னொரு நாயகனாக தோனி வருகிறார்.மிருதுளா, ரிவேதாஸ்ரீ, பாண்டியராஜன், கோவை சரளா, காதல் சுகுமார், போஸ் வெங்கட், ஜாக்குவார் தங்கம், ராஜேந்திரநாத் மீராகிருஷ்ணன், அருண் சின்னையா நந்தினி, மைனாநாகு ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி ராஜா தேசிங்கு இயக்குகிறார்.
முராள் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, இன்று சென்னை வடபழனியில் நடைபெற்றது. விழாவில் கலைப்புலி தாணு, ஆர்.வி.உதயகுமார், இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், நிர்வாகிகள் ஆர்.கே.செல்வமணி, சேகர், பேரரசு மற்றும் பெப்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நூறாம் நாள் பாடல் சி.டி.யை கலைப்புலி தாணு வெளியிட, பிலிம் நியூஸ் ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.
விழாவில், ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை பார்க்கும்போது ஒரு கமர்ஷியல் படத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன. முக்கியமாக, பாடல் காட்சிகள் இளமைத் துள்ளலோடு எடுக்கப்பட்டிருக்கின்றன.
பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு நான் மேடையில் நன்றி சொல்லியாக வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா உலகில், பத்திரிகையில் சினிமாவை கொண்டு செல்வதற்கு பி.ஆர்.ஓ.-க்களை உருவாக்கியவர் இவர்தான்” என்றார்.
பின்னர் பேசிய பேரரசு, “இந்த படத்தின் பாடல் காட்சிகள் மிகவும் கவர்ச்சியோடும், விறுவிறுப்பாகவும் இருக்கின்றன. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் 100 நாட்கள் படம் ஓடுகிறது என்பதெல்லாம் பொய்யான செய்தி. 25 நாள் ஒரு படம் ஓடினாலே அது வெற்றி என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்தப் படம் வெற்றி பெறும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் பேரரசு மேடையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment