Thursday, August 22, 2013

எனக்குக் கிடைத்த வெற்றியல்ல, ஒவ்வொரு பெற்றோருக்கும் கிடைத்த வெற்றி – சேரன்

காதலில் விழுந்த இயக்குனர் சேரன் மகள் தாமினி 20 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு இன்று நீதிமன்றத்தில் பெற்றோருடன் செல்வதாக தெரிவித்தார். இதுகுறித்து பேசிய சேரன், இது எனக்குக் கிடைத்த வெற்றியல்ல. ஒவ்வொரு பெற்றோருக்கும் கிடைத்த வெற்றி என்று கூறினார்.
 
நீதிபதிகளின் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் சேரன், காலை 11 மணியிலிருந்து தற்போது வரை நடந்த விசாரணைக்கு பிறகு நீதியரசர்கள் சி.டி.செல்வம், தனபாலன் ஆகியோர் தாமினியின் மீது தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்கள். அவர்களுடைய உத்தரவின்படி என் மகள் யாருடன் செல்ல விருப்பப்படுகிறாளோ அவர்களுடன் செல்லலாம் என்று ஆணையிட்டுள்ளார்கள்.
 
என் மகள் பெற்றோராகிய எங்களுடன் வாழ விருப்பம் தெரிவித்து எங்களுடன் வந்தாள் என்ற மகிழ்ச்சியான செய்தியை நான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் மகள் கடந்த 20 நாட்களில் தன்னை உணர்ந்து, தன் மேல் உள்ள தவறுகளை ஆராய்ந்து எதிர்தரப்பில் உள்ள சந்துருவின் நடவடிக்கைகளை தெரிந்து, எல்லா உண்மைகளையும் அறிந்து இப்படிப்பட்ட ஒருவரோடு வாழ்வது சரியல்ல என்று முடிவெடுத்துதான் தற்போது நல்ல நிலையில், சுய உணர்வோடு பெற்றோருடன் வந்திருக்கிறார் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.






இந்த விசாரணையை சரியாக நடத்தி ஒரு நல்ல தீர்ப்பை வழக்கிய நீதியரசர்கள் இருவருக்கும் இந்த பிரச்சனையில் பெற்றோருக்காக குரல் கொடுத்த பத்திரிக்கை, தொலைக்காட்சி நண்பர்களுக்கும், என்னோடு இருந்து எனக்கு ஆறுதலாகவும், உறுதுணையாகவும் இருந்த எனது திரைத்துறை நண்பர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வழக்கை சிறப்பாக நடத்திக் கொடுத்த வழக்கறிஞர்கள் ராஜா செந்தூர் பாண்டியன் அவர்களுக்கும், இளங்கோவன் அவர்களுக்கும், மேலும் தமிழ்நாடு முழுவதும் இருந்து தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும், கடிதங்கள் மூலம் பெற்றோரின் வலியை உணர்ந்து எங்களுக்காக குரல் கொடுத்த பெற்றோருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இது எனக்குக் கிடைத்த வெற்றியல்ல. ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு பெற்றோருக்கும் கிடைத்த வெற்றியாக இதைக் கருதுகிறேன். இவ்வாறு சேரன் பேசினார்.

No comments:

Post a Comment