Sunday, September 1, 2013

சுவடுகள்

கௌரவமிக்க மோகன் ஷர்மா-கே.ஆர்.விஜயா தம்பதிகளின் ஒரே மகன் ஜெயபாலா. வில்லன் ராஜேஷ் ஒரு ஏமாற்று பேர்வழி. மோகன் ஷர்மாவை ராஜேஷ் பலமுறை ஏமாற்ற முயன்றும் முடியாமல் தோற்றுப் போகிறார்.
ஒருகட்டத்தில் மோகன் ஷர்மா இறந்த பிறகு ஜெயபாலாவை ஏமாற்ற முயல்கிறார். முடியாத நிலையில் அவரை கொலை செய்ய முயன்று அதிலும் தோற்றுப் போகிறார் ராஜேஷ்.
இதற்கிடையே ஜெயபாலாவும், மோனிகாவும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். இவர்களுடைய காதலுக்கு மோனிகா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தாலும், எல்லோருடனும் சம்மதம் பெற்று அது கல்யாணத்தில் முடிந்து, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.
இந்த நிலையிலும் ராஜேஷ், ஜெயபாலாவை ஏமாற்றும் முயற்சியை கைவிடுவதாக இல்லை. இறுதியில் அவரை ஏமாற்றியும் விடுகிறார். இதனால் வாழ்க்கையை வெறுத்த ஜெயபாலா தன்னுடைய இறப்புக்குப் பிறகாவது இன்சூரன்ஸ் பணத்தை பிள்ளைகள் பெற்று சந்தோஷமாக இருக்கட்டும் என முடிவெடுத்து, தற்கொலை செய்துகொள்ள மலை உச்சிக்கு சென்று சாகத் துணிகிறார்.
கடைசி நிமிடத்தில் ஒரு சித்தர் ஜெயபாலாவுக்கு வாழ்க்கையை வாழ்வதற்கு அறிவுரை கூறுகிறார். இதனால் மனம்மாறி மீண்டும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் நம்பிக்கை மனதுடன் வீடு திரும்பி, குடும்பத்துடன் இணைவதுதான் சுவடுகள் படத்தின் கதை.
அமெரிக்க வாழ் ஈழத் தமிழரான ஜெயபாலா கதை, திரைக்கதை, வசனம் எழுதி, உடைகள் வடிவமைப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பணிகளை கவனித்து, தயாரித்து, இயக்கியுள்ளார்.
பழங்காலத்தில் வாழ்வின் அடையாளங்களை பதிக்க பயன்படுத்தும் பொருள்தான் சுவடிகள். இந்த சுவடுகள் படத்தின் டைட்டில் ஒவ்வொன்றாக ஓலைச் சுவடிகளை புரட்டி காண்பிக்கப்படுவது அருமை.
படம் முழுவதையும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே படமாக்கியிருக்கிறார் ஜெயபாலா. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இவற்றை மாறுபட்ட கோணத்தில் கண்ணுக்கு விருந்தாக காட்சிப்படுத்தும் ஜெயபாலாவின் ஒளிப்பதிவு ஒய்யார அழகு.
ஜெயபாலாவின் அப்பா-அம்மாவாக வரும் மோகன் ஷர்மா-கே.ஆர்.விஜயா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை திறம்பட செய்துள்ளனர். வில்லனாக ராஜேஷ், இவர் காட்டப்பட்டதும் பின்னணியில் ஆந்தையில் அலறல் ஒலி கேட்கிறது. அதன்மூலமாகவே இவருடைய கதாபாத்திரம் குணக்கேடனாது என்பதை புரிய வைத்துவிடுகிறது. இதேபோல், ஒவ்வொருவருடைய குணத்தையும் ஒலிகள் மூலமாகவே ஆங்காங்கே உணர்த்தியிருப்பது சிறப்பு.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓமக்குச்சி நரசிம்மன் இந்த படத்தில் கோவை செந்திலுடன் இணைந்து காமெடியில் சிரிக்க வைக்கிறார். படத்தில் ஆடை வடிவமைப்பிலும் ஜெயபாலாவின் பணி புருவத்தை உயர்த்த வைக்கிறது. குறிப்பாக, மோனிகாவின் ஆடை வடிவமைப்பில் கண்ணியமும், அதே நேரத்தில் கவர்ச்சியுமென அசத்தியிருக்கிறார்.
படத்தில் ஜெயபாலாவின் குரலுக்கு வேறொருவர் டப்பிங் பேசியிருக்கிறார். ஆனால், இவரோ, சித்தர் குரலுக்கு தனது குரலை கொடுத்துள்ளார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் அமைந்த பாடல்கள் காதுகளுக்கு விருந்தாக அமைந்துள்ளது. கவிஞர் முத்துலிங்கம் வரிகளில் சுவடுகள், பூ பூத்தது, உயிரெழுத்து ஆகிய பாடல்கள் நல்ல வரிகளுடன் கருத்தாக அமைந்துள்ளன.
நாட்டில் தற்போது தற்கொலைகள் பெருகிவரும் நிலையில், வாழ்வின் எந்த நிலையிலும் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என்று எல்லா வயதினருக்கும் வலியுறுத்தும் விதத்தில் வெளிவந்துள்ள ‘சுவடுகள்’ பாராட்டுதலுக்குரிய படமாக மாறியிருக்கிறது.
மொத்தத்தில் ‘சுவடுகள்’ சினிமாவிலிருந்து மாறுபட்டது


No comments:

Post a Comment