Thursday, August 8, 2013

ஜெயலலிதாவை சந்திக்க சென்ற நடிகர் விஜய்க்கு அனுமதி மறுப்பு!




சென்னை: 'தலைவா' படப்பிரச்னை குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் விஜய் ஆகியோர் முயற்சி செய்ததாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடித்த 'தலைவா' படம் நாளை (9.8.2013) வெளியாக இருந்த நிலையில், இந்தப் படம் அரசியல் படம் என்றும், அதனை திரையிட்டால் திரையரங்குகளில் குண்டு வைப்போம் என்றும் மிரட்டல் வந்ததை அடுத்து படம் திரையிடுவதில் சிக்கல் எழுந்தது.

மேலும், போலீஸார் தங்கள் தரப்பில் அத்தனை திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து விஜய், 'தலைவா' படம் அரசியல் படமல்ல. குழந்தைகளோடு குடும்பமாக ரசிக்க வேண்டிய ஜனரஞ்சகமான படம் என அறிக்கை விட்டிருந்தார்


இந்தநிலையில், கொடநாட்டில் தங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், படத்தின் இயக்குனர் விஜய் ஆகியோர் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கொடநாடு செல்வதற்கு முன்பே கெரடாமட்டம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி பகுதியிலேயே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

'தலைவா' படத்திற்கு பாதுகாப்பு கேட்பது தொடர்பாக முதல்வரைச் சந்தித்து விளக்கம் அளிக்க நினைத்து கொடநாடு சென்றார்களாம். இந்த தகவலை உறுதிப்படுத்துவதற்காக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. முதல்வரை சந்திக்க சந்திரசேகரும், இயக்குனர் விஜய்யும் மட்டுமே சென்றதாகவும், நடிகர் விஜய் செல்லவில்லை என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment