விஜய், அமலாபால் ஜோடியாக நடித்த ‘தலைவா’ படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ரசிகர்கள் தியேட்டர்களில் விஜய்யின் கட்–அவுட்கள் மற்றும் கொடி தோரணைகள் அமைத்து ரிலீசை கொண்டாட காத்து இருந்தனர்.
இந்த நிலையில் ‘தலைவா’ படத்தை திரையிடக்கூடாது என்று தியேட்டர்களுக்கு திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்தன. இதனால் தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சியானார்கள். பாதுகாப்பு இல்லாமல் படத்தை திரையிட இயலாது என மறுத்தனர். தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் அபிராமி ராமநாதன் தலைமையில் இரு முறை கூடி இப்பிரச்சினை குறித்து விவாதித்தது. நேற்று நள்ளிரவு வரை கூட்டம் நடந்தது. இதற்கிடையில் ‘தலைவா’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்திருந்ததால் வரிவிலக்கு குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது.
படம் பார்த்த அக்குழு உறுப்பினர்கள் சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர். தியேட்டர் அதிபர்களும் படத்தை திரையிட மறுத்தனர். இதனால் ‘தலைவா’ இன்று தமிழகம் முழுவதும் ரிலீசாகவில்லை. பாண்டிச்சேரியிலும் வெளியாக வில்லை. தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் படத்தை திரையிட திட்டமிட்டு இருந்தனர்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மும்பையில் ‘தலைவா’ படம் இன்று திரையிடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து விஜய் ரசிகர்கள் கார், வேன்களில் கேரளா, ஆந்திராவுக்கு படம் பார்க்க புறப்பட்டு சென்றனர். இதனால் இரு மாநிலங்களின் எல்லையோர தியேட்டர்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது. வசூலை வாரி குவித்தது. சுமாராக ஓடிய தெலுங்கு மலையாள படங்களை தூக்கி விட்டு பல தியேட்டர் அதிபர்கள் ’தலைவா’ படத்தை திரையிட்டனர்.
வெளிநாடுகளிலும் ‘தலைவா’ வெளியானது. தமிழ் நாட்டில் ‘தலைவா’ படம் எப்போது வெளியாகும் என்று உறுதியாக தெரிய வில்லை. வெளி மாநிலங்களில் இருந்து ‘தலைவா’ படத்தின் திருட்டு சி.டி. உள்ளே வரலாம் என்று தயாரிப்பு தரப்பில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. படத்தை வெளியிட தீவிர முயற்சிகள் நடக்கின்றது.
No comments:
Post a Comment