Thursday, June 20, 2013

மிஷ்கினை வெளியே போகச் சொன்ன இளையராஜா

சென்னை: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக இசையமைக்கக் கோரி தன்னிடம் வந்த இயக்குநர் மிஷ்கினை முதலில் வெளியே போகச் சொன்னாராம் இசையமைப்பாளர் இளையராஜா. இளையராஜாவின் மிகத் தீவிரமான ரசிகர்களுள் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். மிஷ்கின் - இளையராஜா இணைந்த முதல் படம் நந்தலாலா. அந்தப் படத்துக்கு அருமையான பின்னணி இசையும், அற்புதமான பாடல்களும் தந்திருந்தார் ராஜா. ஆனால் இரண்டு பாடல்களை மட்டும் பயன்படுத்திக் கொண்டு மீதியை சிடியில் மட்டும் வைத்துக் கொண்டார் மிஷ்கின். இடையில் யுத்தம் செய், முகமூடி என இரண்டு படங்களைச் செய்திருந்தார் மிஷ்கின். இவற்றுக்கு இசையமைத்தவர் கே எனும் இளைஞர். இவரும் ராஜா ரசிகர்தான். முகமூடி படத்தில் வரும் ஒரு பாட்டில், 'ராஜா இல்லாத சங்கீதமா' என ஒரு வரியே இடம்பெற்றிருக்கும், பின்னணியில் அன்னக்கிளி இசை ஒலிக்க. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக மீண்டும் இளையராஜாவைத் தேடிப் போன போது ஏற்பட்ட அனுபவம் குறித்து மிஷ்கின் கூறுகையில், "முதலில் என்னை பார்த்தவுடன் வெளியே போ என்றுதான் சொன்னார். நந்தலாலா படத்தில் அவரது பாடல்களை உபயோகிக்கவில்லை என்ற வருத்தத்தை உணர்ந்த நான் அதற்கான காரணங்களை சரிவர விளக்கிய பின்னர் ஒரு மூத்த சகோதரர் போல் கேட்டுக் கொண்டார். பின்னர் தயங்கி தயங்கி இப்படத்தில் பாடல் இல்லை என்று சொன்னதும் சற்றே அதிர்ச்சியடைந்தவர் பின்னர் கதையை முழுமையாகக் கேட்ட பின்னர் முழு சம்மதம் எனச் சொன்னார். இப்படத்தின் முன்னணி இசைதான் படத்தின் பிரதானம் என்று இருவரும் உணர்ந்து பணியாற்றத் தொடங்கி விட்டோம் . பின்னணி இசை என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. திரையில் நாம் படம் பார்க்கும் முன்னரே நம் செவியில் வந்து விழும் இசையை எப்படி பின்னணி இசை என்பது. அது முன்னணி இசைதானே... தவிர இசைஞானி என்றுமே முன்னணிதான். பாடல் இல்லையென்றாலும் இது அவரது ராஜாங்கமே! இப்படத்தில் கதாநயாகியும் இல்லை. அது கதை எடுத்தமுடிவு. நான் எடுத்த முடிவு அல்ல. இந்த படத்தின் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருப்பதன் கூடுதல் பலமே சில முடிவுகளை எடுக்க சுதந்திரம் இருப்பதுதான். என்னுடைய நிறுவனமான லோன் வுல்ஃப் சார்பில் தயாரிக்கப்படும் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ' உங்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும் ஒரு த்ரில்லர் படமாகும். பெரும் பகுதி சென்னையை சுற்றி இரவு நேரத்தில் மட்டும் படமாக்கப்பட்டது. வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் பிரமாதமாக நடித்து இருந்த ஸ்ரீ இப்படத்தில் பாதிக்க பட்ட கல்லூரி மாணவனாக வாழ்ந்து காட்டி இருக்கிறான். படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் உள்ள இப்படத்தின் வெளியீடு செப்டம்பர் இறுதியில் இருக்கும்," என்றார். 

No comments:

Post a Comment