சென்னை: ரஜினிக்கு மருமகனாக இருப்பதால் தனக்கு எந்த பலனும் இல்லை என்று தான் சொன்னதாக வந்தது தவறு என்றும், தான் சொன்னதை தவறாக எழுதிவிட்டார்கள் என்றும் தனுஷ் கூறியுள்ளார். ரஜினி பற்றி தனுஷ் அடிக்கடி எதையாவது பேசி வைப்பதும், பின்னர் அதற்கு விளக்கம் சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது. முன்பு ஒரு முறை, ரஜினிக்கு மருமகனாக இருப்பது தனக்கு மைனஸ்தான் என்று ஒரு இணையதளத்துக்கு பேட்டி கொடுத்து, பின்னர் அதை மறுத்திருந்தார் தனுஷ். இப்போதும் கிட்டத்தட்ட அதே போல பேச ஆரம்பித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிக்கு மருமகனாக இருப்பதால் எனக்கு எந்தப் பலனுமில்லை என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இன்று அதை மறுத்துள்ளார் தனுஷ். இன்று சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த அம்பிகாபதி பிரஸ் மீட்டில், அவரிடம் இதுகுறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தனுஷ், "நான் சொன்னதை தவறான பொருளில் எழுதியுள்ளார் அந்த நிருபர். அவர் யார் என்று தெரியவில்லை. ரஜினியின் மருமகனாக இருப்பது எனக்கு பலமும் இல்லை, பலவீனமும் இல்லை என்றுதான் நான் கூறியிருந்தேன். இதை தனக்கு ஏற்ற மாதிரி எழுதியுள்ளார் அந்த நிருபர். ரஜினி அவர் வேலையில் பிஸியாக இருக்கிறார். நான் என் வேலையில் பிஸியாக இருக்கிறேன். அதே நேரம் அவரோடு என்னை ஒப்பிடுவது தவறு. நான் இருபத்தைந்து படங்கள்தான் பண்ணியிருக்கிறேன். அவரோ சினிமாவின் முகமாக இருக்கிறார். அவருடன் என்னை ஒப்பிடக் கூடாது," என்றார்.
No comments:
Post a Comment