சென்னை: விஷுவல் கம்யூனிகேசன் படித்த இளைஞர்கள் உருவாக்கிய 'உ' என்ற தமிழ் படத்தின் இசையை பிரபல இயக்குநர் விக்ரமன் வெளியிட்டார். தயாரிப்பாளர் தேனப்பன் பெற்றுக் கொண்டார்.
இந்த இசை வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனியில் நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேனப்பன், இயக்குனர் விக்ரமன், யூ.டிவி, தனஞ்செயன், எஸ்.எஸ். குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் கதை நாயகனாக தம்பி ராமையா வருகிறார். இவருடன் 4 இளைஞர்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தை பீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஆஷிக் இயக்குகிறார். இவர் எஸ்எஸ் குமரனிடம் பணியாற்றியவர். இப்படத்தில் 25-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
சென்னை, கொடைக்கானல், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கும் வருகிறது. பத்திரிகையாளர் முருகன் மந்திரம் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். அபிஜித் ராமசாமி இசையமைத்துள்ளார்.
விழாவில் பேசிய தம்பி ராமையா, "சரி...கேட்டுத்தான் பார்ப்போமே என்றுதான் கதை கேட்க ஆரம்பித்தேன்...சும்மா சொல்லக்கூடாது பயல்கள் மிரட்டியிருக்கிறார்கள்... என்னைப் பாடவைத்து ஆடவைத்து அமர்க்களப் படுத்தி விட்டார்கள்,"
என்றார். பாடலாசிரியர் முருகன் மந்திரம் பேசுகையில், "பத்து வருடங்களுக்கு முன்பு சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்கிற வேட்கையோடு சென்னைக்கு வந்து... குடும்பம் குட்டி என்று ஆகி வாழ்வாதாரத்திற்கே ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும்... சினிமா பத்திரிக்கையாளராகவே எனது பயணம் இருந்ததால் சினிமாவுக்குள்ளேயே இருக்கமுடிந்தது... இன்று பாடலாசிரியராக இந்த மேடையில் நிற்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது... அதுவும் எனது பாடல்களைப் பாடி தேசிய விருது பெற்ற தம்பிராமையாவும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டம் வென்ற ஆஜித்தும் திரைப்படப் பாடகர்களாக அறிமுகமாகியிருக்கிறார் என்பதும் எனக்கு பெருமையாக உள்ளது," என்றார்.
No comments:
Post a Comment