Sunday, September 8, 2013

படஅதிபர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நடந்தது. நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. நீதிபதிகள் எஸ்.ஜெகதீசன், கே.வெங்கட்ராமன் தேர்தல் அதிகாரிகளாக இருந்து இந்த தேர்தலை நடத்தினர். வாக்கு சாவடியில் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருந்தது.
ஏராளமான போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். ஓட்டுப்பதிவு நடந்த இடத்தில் ஏராளமான தயாரிப்பாளர்கள் திரண்டு நின்று தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டிய படி இருந்தனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் வந்து ஓட்டு போட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் காலை 10.30 மணிக்கு ஓட்டு போட்டார். தனது அடையாள அட்டையை வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் காண்பித்து விட்டு பட்டனை அழுத்தி ஓட்டை பதிவு செய்தார். நடிகர்கள் கமலஹாசன், ராதாரவி, மன்சூர் அலிகான், சசிகுமார், எஸ்.வி.சேகர், நடிகைகள் குஷ்பு, தேவயானி, நிரோஷா போன்றோரும் ஓட்டு, போட்டனர்.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் கே.ஆர்.கலைப்புலி தாணு, துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் டி.ஜி.தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ் பவித்ரன், கதிரேசன் பட்டியல் கே.சேகர் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் சிவசக்தி பாண்டியன் டி.சிவா, ஞானவேல் ராஜா சங்கிலி முருகன், தேனப்பன் ஆகியோரும் ஓட்டு போட்டனர்.
எஸ்.ஏ.சந்திரசேகரன், புஷ்பா கந்தசாமி, கமீலாநாசர், ஆர்.கே.செல்வமணி, ஏ.எல்.அழகப்பன், தங்கர் பச்சான், மனோஜ் குமார், கோவை தம்பி, காஜா மைதீன், சித்ராலட்சுமணன், எச்.முரளி, ஜாகுவார் தங்கம், ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில் பி.சி.அன்பழகன், வி.சேகர், கருணாஸ், எடிட்டர் மோகன், ஜி.ஆர், கருநாகராஜன், அகத்தியன் உள்பட பலர் ஓட்டளித்தனர். வாக்கு சாவடிக்கு வேட்பாளர் உருவப்படம் அணிந்து வந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது.
வாக்கு சாவடி அருகில் பேனர் வைக்கவும் சிலர் எதிர்த்தனர். இதையடுத்து அவை அப்புறப்படுத்தப்பட்டன. தேர்தலில் மூன்று அணிகள் மோதுகின்றன. ஓட்டுப்பதிவு எந்திர கோளாறால் 10 நிமிடம் தடங்கல் ஏற்பட்டது. மாலை 4 மணி வரை ஓட்டுப் பதிவு நடைபெறும் இன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.


பேய் படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய்

தொடர்ந்து காமெடி படங்களை இயக்கி வரும் சுந்தர்.சிக்கு இந்த பார்முலா போரடித்துவிட்டதாம். காதல், காமெடி, சென்டிமெண்ட் இதிலிருந்து விலகி வேறுமாதிரியான படங்களை எடுக்கலாம் என முடிவெடுத்தவர், தற்போது பேய் படங்களுக்கு என்று தனி ரசனை இருப்பதால் அடுத்து ஒரு பேய் படம் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘சந்திரமுகி’ படத்தைப் போன்று பேய் வசிக்கும் அரண்மனையில் நடக்கும் திகீர் சம்பவங்களை மையமாக வைத்து படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ‘அரண்மனை’ என்று பெயர் வைத்திருக்கிறார். இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் இவரே நாயகனாகவும் நடிக்க உள்ளார். இன்னொரு நாயகனாக வினய் நடிக்கிறார்.
மேலும், ஹன்சிகா மொத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் என மூன்று அழகான ராட்சசிகளும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

தமிழுக்கு அறிமுகமாகும் மம்முட்டியின் மகனுக்கு ஜோடியாகிறார் நஸ்ரியா

குறும்பட இயக்குனரான பாலாஜி மோகன் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்து இயக்கப்போகும் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியது.
இந்நிலையில், இவர் அடுத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகனுமான துல்கர் சல்மானை தமிழில் அறிமுகப்படுத்த உள்ளார். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார்.
துல்கர் சல்மான் தமிழில் முதன்முதலாக நடிக்க இருக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க நஸ்ரியா நசீம் ஒப்பந்தமாகி உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்திற்கு பெயர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் தற்போது ‘சலால மொபைல்ஸ்’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் ரூ.20 கோடி இழந்து விட்டேன்: பவர் ஸ்டார் சீனிவாசன்

மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளிவந்தார். தொடர்ந்து படங்களில் நடிக்கப் போவதாக கூறினார். பவர் ஸ்டார் சீனிவாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
நான் யாரையும் ஏமாற்ற வில்லை. சில துரோகிகள் என்னை பழிவாங்கி விட்டனர். பொருட்களை எடுத்துக் கொண்டு எங்கேயும் ஓடிப்போகவில்லை. தங்கள் வேலையை முடித்துக் கொடுக்க சிலர் பணம் கொடுத்தனர். அதை இன்னொருத்தரிடம் கொடுத்தேன். அவர் ஏமாற்றி விட்டார். மோசடி வழக்கில் சிக்கிய போது என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் கூட எதிரியாகி விட்டனர்.
சினிமாவில் நடிக்க வந்தேன். நிறைய பேர் என்னை ஏமாற்றினர். ரூ.20 கோடி வரை சினிமாவில் இழந்து விட்டேன். அந்த டைரக்டர்கள் யார் என்பதை சொல்ல விரும்பவில்லை. நான் சிறையில் இருந்த போது ரூ.8 கோடியில் கட்டிய ஆஸ்பத்திரியை சிலர் சூறையாடினர். பொருட்களையெல்லாம் அள்ளிச் சென்றனர். ஜெயிலுக்கு போனவனெல்லாம் குற்றவாளிகள் இல்லை.
வெளியில் இருப்பவனெல்லாம் நல்லவனும் இல்லை. ஜெயில் வாழ்க்கை கஷ்டமாக இருந்தது. என் இடத்தில் இன்னொருத்தர் இருந்து இருந்தால் தற்கொலை செய்து கொண்டு இருப்பார். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். சினிமாவில் நிறைய பேரை தம்பி என்றுதான் அழைப்பேன். ஜெயிலில் இருந்த போது அவர்கள் யாரும் என்னை வந்து பார்க்கவில்லை.
நடிகர் பிரசாந்த் மட்டும் விசாரித்தார். ஒருத்தனுக்கு கஷ்டம் வந்தால் கூட இருக்கனும். அது தான் நட்பு என்னை வந்து பார்க்காதவர்கள் இதை உணர வேண்டும். இந்த மாதம் நான் நடித்த மூன்று படங்கள் ரிலீசாகிறது. இன்னும் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன்.
இவ்வாறு பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார்.


தமிழ் படத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி: மதுபாலா

நடிகை மதுபாலா மீண்டும் நடிக்கிறார். 1990–களில் தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். தமிழில் நடித்த ‘ரோஜா’, ‘ஜென்டில் மேன்’ படங்கள் வெற்றிகரமாக ஓடின. மதுபாலாவுக்கு 1999–ல் திருமணம் நடந்தது. கணவர் ஆனந்தஷா. இவர்களுக்கு இருமகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்க வந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–
நடிகையாக இருந்த போது ரொம்ப கஷ்டப்பட்டேன். குட்டைப்பாவாடை அணியச் சொல்லி இயக்குனர்கள் பலர் நிர்ப்பந்தித்தனர். என் உடம்புக்கு அது சரிப்படாது என்று மறுத்தேன். இதனால் நிறைய படவாய்ப்புகளை இழந்தேன். டைரக்டர்கள் பாலச்சந்தர், மணிரத்னம் படங்களில் நடித்துள்ளேன். இவர்கள் இருவரும்தான் என்னை புரிந்து கொண்டு என் உடம்புக்கு ஏற்ற ஆடைகளை அணிய செய்தனர்.
திருமணத்துக்கு பின் நடிக்கவில்லை. என் கணவரை நண்பர் மூலம் படப்பிடிப்பு ஒன்றில் சந்தித்தேன். காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொண்டோம். இருமகள்கள் உள்ளனர். தமிழ் படத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இது மகிழ்ச்சியளிக்கிறது. தெலுங்கு படங்களிலும் நடிப்பேன்.
இவ்வாறு மதுபாலா கூறினார்.


ரூ.1 1/2 கோடி சம்பளம் கேட்டதால் காஜல்அகர்வாலுக்கு படங்கள் குறைந்தது

நடிகை காஜல்அகர்வால் ரூ.1½ கோடி சம்பளம் கேட்பதால் படவாய்ப்புகள் குறைந்துள்ளது. இவர் சரோஜா படத்தில் கவுரவ தோற்றத்தில் தான் வந்தார். தெலுங்கில் நடித்த ‘மகதீரா’ படம் சூப்பர் ஹிட்டானதால் ஒரே நாளில் உச்சத்துக்கு போனார். தமிழில் ஹிட்டான துப்பாக்கி படம் காஜல் மார்க் கெட்டை மேலும் உயர்த்தியது.
அதன்பிறகு சம்பளத்தை ரூ.1½ கோடியாக உயர்த்தினார். சமீபத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய வந்த தயாரிப்பாளர்களிடம் ஒன்றரை கோடி சம்பளம் வேண்டும் என கறாராக கூறிவிட்டாராம். தொகையை கொஞ்சம் குறைக்கும்படி தயாரிப்பாளர்கள் வேண்டியும் காஜல் அகர்வால் கேட்கவில்லை. இதையடுத்து அவருக்கு பதில் வேறு நடிகை தேடி போய் விட்டனர். இதனால் நிறைய பட வாய்ப்புகள் கை நழுவி போனது.
தெலுங்கில் பவன்கல்யான் ஜோடியாக ‘கப்பார் சிங் 2’ படத்திலும் பால கிருஷ்ணா நடிக்கும் புதுப் படமொன்றிலும் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர். சம்பள பிரச்சினை தொடர்பாக இவ்விரு படங்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு விட்டார்.
லிங்குசாமி இயக்கத்தில் கமலஹாசன் நடிக்க உள்ள புதுபடத்தில் கமலுக்கு ஜோடியாகவும் காஜல் அவர்வாலை தேர்வு செய்தனர். ஆனால் இந்த படத்தையும் ரூ.1½ கோடி கேட்டு இழந்தார். இப்போது அவர் கைவசம் படங்கள் இல்லை. இதனால் தவிப்பில் இருக்கிறார்.